அஜித் குமார்

குட் பேட் அக்லி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் சிறிது காலம் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்திருக்கிறார். தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் GT4 சீரிஸ் கார் பந்தையங்களில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரேஸிங் பக்கம் அஜித் திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்திற்கு உலகம் முழுவதிலும் கிடைத்துள்ள வரவேற்பு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித் வழிநடத்தும் அஜித் குமார் ரேஸிங் அணிக்கும் சர்வதேச அளவில் பெரிய கவனம் கிடைத்துள்ளது. 

அஜித் 64 ஆவது படம்

அஜித்தின் அடுத்த படம் தொடர்பான  சில தகவல்கள் இணையத்தில் வெளியாகினாலும் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என தெரிவித்திருந்தார். அதுவரை முழுக்க முழுக்க ரேஸிங்கில் கவனம் செலுத்த இருக்கிறார். 

சிலையின் காலுக்கு முத்தம் கொடுத்த அஜித் 

நடிகர் அஜித் குமார் பிரபல கார் ரேஸர் அயர்டன் சென்னாவின் நினைவிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும் அவரது சிலையின் கால்களுக்கு அஜித் குமார் முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் தன்னுடைய சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காத பிரபலங்களை கொண்டாடுவதை ஊக்குவிக்காத அஜித்தே ஒருவரின் கால்களுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார் என்றால் அவர் பெரிய ஆளாக தான் இருக்க வேண்டும் இல்லையா. 

யார் இந்த அயர்டன் சென்னா

பிரேஸில் நாட்டைச் சேர்ந்த கார் ரேஸிங் ஜாம்பவான் அயர்டன் சென்னா. மூன்று ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்களை வென்றவர். மோட்டார் ரேஸிங் வரலாற்றில் தலைசிறந்த ஒரு வீரராக கருதப்படுகிறார். இவரது ஆக்ரோஷமான குணமே ரேஸிங்கில் இவரை பல உயரங்களுக்கு இட்டுச் சென்றது. 1994 ஆம் ஆண்டு போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அதே இடத்தில் அயர்டன் சென்னாவை நினைவு கூறும் வகையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.