பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து, உளவுத்துறை மூலம் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலை அவர் பகிர்ந்திருந்தால், 26 சுற்றுலாப் பயணிகளின் உயிர் தப்பியிருக்கும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

காங்கிரஸ் விழாவில் உரையாற்றிய கார்கே

கர்நாடகாவின் ஹோசபேட் நகரில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விழாவில் உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்ப்பதாகவும், சீனாவின் ஆதரவோடு இந்தியாவிற்கு தொந்தரவு கொடுக்க நினைப்பதாகவும் கூறினார். இதுபோன்ற விஷயங்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடு முக்கியம் என்பதால், நாட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு தாங்கள் ஆதரவை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

Continues below advertisement

மோடி மீது சரமாரியாக குற்றம்சாட்டிய கார்கே

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்னதாக, ஓர் உளவுத் துறை அறிக்கையை மோடி பெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறினார்.

அந்த உளவுத் துறை தகவலை வெளிப்படுத்தியிருந்தால், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றும், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு, மோடி அரசு அங்கு பாதுகாப்பு வழங்காததே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

பிரமர் மோடிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏன் காவல்துறை அல்லது ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கார்கே கேள்வி எழுப்பினார். அப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களின் தூதுக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று கூறிய கார்கே, ஒருதலைபட்சமாக மோடி முடிவெடுத்ததாகவும் சாடினார்.

இருந்தாலும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தங்கள் எதுவும் கூறவில்லை என்றும், நாட்டை காப்பாற்றுவதே காங்கிரஸின் நோக்கம் என்பதால், தூதுக் குழுவின் ஒரு பகுதியாக தங்கள் பிரதிநிதிகளையும் அனுப்புவதாக கார்கே தெரிவித்தார்.

“அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த மோடி ஒரு தேச பக்தரா?“

தொடர்ந்து பேசிய கார்கே, பஹல்காம் தாக்குதலுக்குப்பின் நடைபெற்ற னைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், நாட்டிற்கு ஒற்றுமை தேவைப்பட்டபோது, மோடி தேசிய நலனை புறக்கணித்துவிட்டு, பீகாரில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்றதாகவும் கடுமையாக விமர்சித்தார் கார்கே.

மேலும், 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய மோடி, அதில் கலந்துகொள்ளவில்லை என்றும், அதை தாங்கள் தவிர்த்திருந்தால், தாங்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருப்போம் எனவும், ஆனால் மோடி அதை தவிர்த்துவிட்டு தேச பக்தராகவே இருப்பதாகவும் விமர்சித்தார்.

அதோடு, காங்கிரஸ் தேசத்திற்காக போராடியுள்ளதாகவும், தேசபக்தி உங்களுக்கு(மோடி) சொந்தம் அல்ல, உண்மையான தேசபக்தி என்பது வெற்றுப் பேச்சுகளில் அல்ல, ஒற்றுமையில் உள்ளது என்றும் கார்கே தெரிவித்தார்.

மேலும், தாங்கள் நாட்டிற்காக எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாகவும், ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டிற்காக போராடவில்லை என்றம், அவர்கள் நாட்டில் தவறான செயல்களை நடத்துவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.