கரூர் சம்பவம் தொடர்பாக நான் கூறிய கருத்தை தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திசைதிருப்ப சிலர் முயற்சிக்கிறார்கள் என நடிகர் அஜித்குமார் கூறியதாக சாணக்யா வலைத்தளம் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகம் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் தொடங்கி பலரும் விஜய், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என விமர்சித்தனர். எனினும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது கரூர் சம்பவம் குறித்து பேசிய அவர், இதில் தனி நபருக்கு மட்டுமே பொறுப்பு என்றில்லாமல் அனைவருக்கும் பங்கிருக்கிறது. நாம் சரியான அளவில் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என கூறியிருந்தார். அஜித்தின் இந்த கருத்தை விஜய்க்கு எதிராக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்திய திரையுலக நட்சத்திரங்களின் முக்கியமானவரும், கார் ரேஸ் வீரருமான அஜித்குமார் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கில ஊடகத்திற்கு நான் அளித்த பேட்டியில் சொன்ன கருத்துகள் இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதிற்கு பதிலாக ஒரு சிலரால் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்கத்தான் முயல்வார்கள்.
ஆனால் நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. அதை அஜித்துக்கும், விஜய்க்குமான மோதல், அஜித் விஜய் ரசிகர்களுக்குமான மோதல் என மாற்றி விட்டார்கள். நாம் நச்சு கலந்த சமூகமாக மாறி விட்டோம்.
என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி இன்னும் 10,20 வருடங்கள் கழித்து மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கும். உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது நினைத்தால் என் படங்களைப் பாருங்கள் என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அதேசமயம் கரூரில் நடந்தது துரதிஷ்டவசமான சம்பவம். அது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த விபத்து.
இதற்கு முன் ஆந்திரா சினிமா தியேட்டர் ஒன்றில் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இன்னும் ஏன் பல நாடுகளிலும் நடந்துள்ளது. நான் ஏற்கனவே சொன்னது போல நான் உட்பட அனைவருக்கும் பொதுவெளியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்ற விதி உள்ளது. நான் சொல்லும் கருத்துகள் தவறாக புரிந்துக் கொள்ளப்படாது என நம்புகிறேன். ஒரு சில ஊடகங்கள் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகின்றது.
என் தந்தை இறந்தபோது ஒரு சில ஊடகங்கள் அவரது உடலை எடுத்துச் சென்றபோது எங்களை பின் தொடர்ந்தது. உயிரில்லாத அந்த உடலின் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த பலரும் உயிரை பணயம் வைக்க நேர்ந்தது. ஊடகங்களே இப்படி இருக்கும்போது ரசிகர்களையும், தொண்டர்களையும் குறை சொல்ல என்ன இருக்கிறது. நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடமும் தவறுகள் உள்ளது.
ஓட்டளிப்பதை குடிமகனின் கடமையாக பார்க்கிறேன். உலகம் முழுவதும் மக்களும், அரசுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாக இருக்க வேண்டும். சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்பங்களுக்கு ஆளாகின்றன. மக்களுக்கு குரல் கொடுக்க அரசியல் கட்சிகளும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களும் இருக்கின்றனர். ஆனால் உள்நோக்கத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பவர்களும் உள்ளனர். அவர்களால் போலிகளால் மூளைச்சலவைக்கு ஆளாகாமல் மக்கள் இருக்க வேண்டும்.
என்னுடைய இந்த பேட்டியை சிலர் விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன். வாழ்த்தியிருக்கிறேன். எல்லோருமே அவரவர் குடும்பங்களுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ நான் வாழ்த்துகிறேன்.