சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சியும் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது ஒரே மகனான வெற்றி இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது.
இப்படியான நிலையில் இவர் தனது புதிய படம் தொடர்பான பணிக்காக இமாச்சலபிரதேசம் சென்றிருந்தார். உடன் நண்பர் கோபிநாத் சென்றிருந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் ஓட்டுநர் டென்ஜின் என்பவரது காரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே கார் கட்டுப்பாட்டை இழந்து கின்னவுர் பகுதியில் ஓடும் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் டென்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று வெற்றி துரைசாமி உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் #RIPVetriDuraisamy என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ள நிலையில், அதில் மனிதநேய அறக்கட்டளையில் படித்து இன்றைக்கு சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரும் வெற்றி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், சைதை துரைசாமிக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதேசமயம் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவருடன் அஜித் இருக்கும் போட்டோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.