தி ஹாலிவுட் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டியில் ஒரு பிரபலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் , மோட்டர் ஸ்போர்ட்ஸ் , கரூர் விபத்து உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி அஜித் பேசியுள்ளார். தனது வீடியோ ஒன்றை வைரலாகி அதை வைத்து தன்னை கெட்டவனாக ஊடகங்கள் சித்தரித்ததாக அஜித் கூறியுள்ளார்.
இளைஞரிடம் செல்ஃபோனை பறித்த வீடியோ பற்றி அஜித்
" ஒரு பிரபலமாக இருப்பதால் என்னால் என் குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிட முடிவதில்லை. என் குழந்தைகளை பள்ளியில் விட சென்றால் அங்கு கூட்டம் கூடுகிறது. ரசிகர்கள் உங்களை பார்க்க திரள்கிறார்கள். அதிக கூட்டம் சேர்வதால் பள்ளி நிர்வாகமே என்னை கிளம்ப சொல்லியிருக்கிறது. குடும்பத்துடன் வெளியே சென்றால் நான் காரை ஓட்டிச் செல்வதைப் பார்த்து வண்டியில் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் கார் முன்பு வண்டியை நிறுத்து நான் அவர்களுடன் செல்ஃபீ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு ரசிகர் அப்படி தனது அன்பை வெளிப்படுத்துகையில் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என்னை மற்ற தந்தைகளைப் போல் இருக்கச் சொல்லி என் குழந்தைகள் என்னிடம் அழுதிருக்கிறார்கள். ஆனால் இந்த சவால்களை கடந்து என்னால் என் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
பொது நாகரிகம் எல்லாரும் பின்பற்ற வேண்டும்
இதேபோல் ஒருமுறை தேர்தலின்போது நான் வாக்களிக்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு இளைஞர் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது அப்படி மீறினால் அபராதம் விதிக்கப்பட்டும் என்று தெளிவாக எழுதியிருந்தது. நான் முதலில் பத்திரிகையாளர்களிடம் பொறுமையாக சொன்னேன். பின் கோபமாகி அந்த இளைஞரிடம் இருந்து செல்ஃபோனை பறித்து வைத்தேன். உடனே இதை ஊடகங்கள் என்னை கெட்டவனாக சித்தரிக்கத் தொடங்கினார்கள். இதனால் அந்த இளைஞனும் தன்னை பாதிக்கப்பட்டவனாக உணர்கிறார். அவன் செய்தது சரியென்று நம்புகிறார். அங்கிருந்த பத்திரிகையாளர்களில் யாரும் அங்கு சுற்றி என்ன எழுதியிருந்தது என்பதை காட்டவில்லை. நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். என்னைப் பொறுத்தவரை பொது வெளியில் நாகரிகமாக நடந்துக்கொள்வது என்பது எல்லாருக்கும் பொதுவானது. அது ஒரு சாமானியனாக இருந்தாலும் சரி , பத்திர்கையாளர் அல்லது பிரபலமாக இருந்தாலும் சரி." என அஜித் கூறினார்.