செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில், நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Continues below advertisement

முன்விரோதம் காரணமாக மோதல்

மதுராந்தகம் அருகே உள்ள மதூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே சில முன்விரோதத்துடன் இருந்துள்ளனர். சமீபத்தில், இவ்விருவருக்கும் வின்னம்பூண்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் திடீரென தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.

நிபந்தனை ஜாமின்

இந்தச் சம்பவம் தொடர்பாக, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய போது, அவர்களுக்குச் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான நிபந்தனை, குறிப்பிட்ட காலத்திற்கு அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

Continues below advertisement

நீதிமன்ற நிபந்தனையின்படி, இன்று காலை விஜயகுமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரும் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தங்களது கையெழுத்துக்காக வந்துள்ளனர். காவல் நிலைய வாசலில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபோது, பழைய முன்விரோதம் காரணமாக மீண்டும் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை எடுத்து, வினோத்குமாரை நோக்கித் தாக்கியுள்ளார்.

காவல் நிலைய வாசலில் நடந்த கொடூரம்

இந்தத் தாக்குதலில், வினோத்குமாரின் கழுத்துப்பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் வினோத்குமார் நிலைகுலைந்தார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சுதாரித்துக்கொண்டு விரைந்து செயல்பட்டனர்.

காயமடைந்த வினோத்குமார் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, கத்திக்குத்து ஆழமாகப் பாயாததால், அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் அதிர்ச்சி 

சம்பவ இடத்திலேயே தாக்குதல் நடத்திய விஜயகுமாரை அச்சிறுப்பாக்கம் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். காவல் நிலைய வளாகத்திற்கு அருகிலேயே ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட விஜயகுமாரிடம், முன்விரோதம் மற்றும் கத்திக்குத்துக்கான சரியான காரணம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர்கள் காவல் நிலையத்திலேயே இதுபோன்ற மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.