நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு முன் அபுதாபியில் நடைபெறும் ஏசியன் லெமன்ஸ் கார் பந்தையத்தில் கலந்துகொண்டுள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டிக்கு சென்று அஜித்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நேற்று ரேஸ் டிராக்கில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில் சில ரசிகர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் கடுப்பான அஜித் அவர்களை நாகரிகமாக நடந்துகொள்ள சொல்லி கண்டித்தார்.
இது தியேட்டர் இல்ல - ரசிகர்களிடம் கோபப்பட்ட அஜித்
வீடியோ ஒன்றில் அஜித் தனது ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்டு 'மானம் போகுது . தயவு செய்து நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். இது தியேட்டர் இல்ல' என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்களிடம் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அஜித் கோபப்பட்டது ஏன் ?
ரசிகர்கள் மீது அஜித் கோபப்பட்ட காரணம் குறித்து சம்பவ இடத்தில் இருந்த சிலர் பேசியுள்ளார்கள். கடந்த இரு நாட்கள் அஜித் ரேஸ் டிராக்கில் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ரசிகர்கள் பலர் அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டார்கள். அதே நேரம் ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்ஃபீ எடுத்துக்கொள்ள காத்திருந்தார்கள். இதனால் மற்ற அணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களில் சிலர் மது அருந்திவிட்டு வந்திருந்ததாகவும் அஜித்தின் ரேஸ் காரில் சாய்ந்தபடி அவர்கள் செல்ஃபீ எடுத்துக்கொள்ள முயற்சித்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மற்ற அணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அஜித்தின் அணிக்கு அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதால் தான் அஜித் ரசிகர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டதாக அஜித்திற்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளார்கள்.