பயில்வான் ரெங்கநாதனின் தடாலடி பேச்சும், அவரது விமர்சனமும் விமர்சனத்தை தாண்டி புகாராக போலீஸ் ஸ்டேஷன் கதவை தட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது. இத்தனைக்கும் அவர் ஒரு முதுநிலை நடிகர். சினிமாத்துறையில் இருந்தவர், அத்துறை சார்ந்தவர்களை சாடும் போது, அது இன்னும் கவனிக்கப்படுகிறது. திடீரென பயில்வான் ரெங்கநாதன் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் எழக்காரணம் என்ன? இன்று தான், அவர் அப்படி பேசுகிறாரா? இல்லை இதற்கு முன்பும் இப்படி தான், பேசி வந்தாரா?  என்று பார்த்தால், பத்திரிக்கையாளராக அவர் காலம் தொட்டே, அவரது பேச்சுக்கள், கேள்விகள் கொஞ்சம் குசும்பு நிறைந்ததாகவே இருந்துள்ளன.




நடிகர் அஜித், பேட்டி அளிக்கமாட்டார், விழாக்களில் பங்கேற்க மாட்டார், கருத்துக்களை தெரிவிக்க மாட்டார் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் ஒரு முறை அவர் முன்வந்து கருத்து தெரிவிக்க முன்வந்து, செய்தியாளர்களை சந்தித்த போது, பயில்வான் ரெங்கநாதன் அவரிடம் கேள்வி எழுப்பியதும், அதற்கு அஜித் அளித்த பதிலும் பலருக்கு தெரியாது. உண்மையில், இது போன்ற நிகழ்வுகளை அதன் பின் முற்றிலும் அஜித் தவிர்க்க, அந்த பேட்டி கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 


இதோ அந்த செய்தியாளர் சந்திப்பில் பயில்வான் ரெங்கநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் அஜித் அளித்த பதில்கள் இதோ...


கேள்வி: பயில்வான் ரெங்கநாதன்:


உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்குமான தொடர்பு ரொம்ப குறைவாயிடுச்சு; முன்பு மாதிரி இல்லை, இதைப் பத்தி என்ன சொல்றீங்க?


பதில்: அஜித்:


இல்லை சார்... பொதுவாகவே நான் ரொம்ப ரிசர்வ் டைப். உங்களுக்கு நல்லா தெரியும். நீங்களே ஏன் கூட நிறைய படங்களில் நடிச்சிருக்கீங்க. 


கேள்வி: பயில்வான் ரெங்கநாதன்:


நிறைய பேர் எங்களிடம் வந்து புகார் தெரிவிக்கிறார்கள். அதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்களிடம் கூறுகிறேன். 


பதில்: அஜித்:


சரி தான்... அடிப்படையில் நான் ஒரு தனிநபர். தனிமை எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகருக்கு பப்ளிசிட்டி அவசியம் தான். இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதையும் மீறி ஒரு லைஃப் இருக்கு. அதையும் மீறி ஒரு வாழ்க்கை இருக்கு. அதனால் தான், என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னன்னா... உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். நேரத்தை எப்போதும் வீணடிக்காதீங்க. நேரம் திரும்ப வராது. இளைமை காலத்தை வீணடித்து விடக்கூடாது. என் ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் கொடுத்த தோல்விகளை வேறு யாராவது கொடுத்திருந்தால், இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள். அதனால் தான் இங்கே நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நம்பிக்கையோடு வர்றீங்க. அவங்க கொடுக்குற நம்பிக்கை, பாசத்திற்கு முன் எதுவும் பெரிதல்ல.


என்று அந்த செய்தியாளர் சந்திப்பில், பயில்வான் ரெங்கநாதனுக்கு ‛நச்’ பதில் அளித்திருந்தார் அஜித். எதிலும், பங்கேற்பதில்லை, பேசுவதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு, ‛நான் பேசினால் எப்படி இருக்கும்’ என்று பதிலளித்திருப்பார்’ அந்த பேட்டியில் அஜித்.