அஜித் குமார்
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தகட்டமாக ரஷ்யா செல்ல இருக்கிறது படக்குழு. இப்படியான நிலையில் அஜித் மற்றும் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அஜித் பற்றி சிரஞ்சீவி
சிரஞ்சீவி தற்போது விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் தான் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்பு என்று தெரிந்ததும் அஜித் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியை பார்க்க சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து நிறைய நேரம் உரையாடி பின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சிரஞ்சீவி இப்படி கூறியுள்ளார். “நேற்று மாலை விஸ்வம்பாரா படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விருந்தினராக அஜித் வந்தார். நாங்கள் இருவரும் அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் வெளியான சமயத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகத்தின் இசையை நான் தான் வெளியிட்டேன். பிறகு அஜித்தின் மனைவி ஷாலினி நான் நடித்த ’ஜகடெகாவீருது அதிலோக சுந்தரி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அஜித்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சியைப் நினைத்து நான் வியப்படைந்தேன். இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்த பிறகு அவர் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதராகவே இருக்கிறார்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.
அஜித் பற்றிய இந்தப் பதிவு அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.