ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் "அரசாட்சி". முரளி மனோகர், ஹரிஷ் விக்ரம், மற்றும் விஜயகுமார் இணைந்து தயாரித்த இப்படத்தினை இயக்கினார் என். மகாராஜன். 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதியான இன்று வெளியானது.
அர்ஜுன் ஜோடியாக உலக அழகி அறிமுகம் :
முன்னாள் உலக அழகி பட்டம் பெற்ற லாரா தத்தா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். விவேக், எஸ்.வி. சேகர், கரண், நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், மணிவண்ணன், பி. வாசு மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நியாயத்தின் பக்கம் அர்ஜுன் :
சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன். அவரின் ஜோடியாக ஒரு பொம்மையை போல அவ்வப்போது வந்து போகிறார் லாரா தத்தா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனது சகோதரியின் கணவனான தீய செயலில் ஈடுபடும் ரகுவரனை மனித சங்கிலிக்குள் சிக்க வைத்து துப்பாக்கியில் சுட்டு கொல்கிறார் அர்ஜுன். தன்னுடைய இந்த செயலுக்கான காரணத்தை ஊடகம் மூலம் தெரிவிப்பதோடு படம் நிறைவடைகிறது.
14 வில்லன்கள் நடித்த திரைப்படம் :
இயக்குனர் மகாராஜன், நடிகர் விஜயகாந்த் நடித்த "வல்லரசு" திரைப்படத்தை இயக்கிய பிறகு இருவரும் சேர்த்து மற்றுமொரு படத்தில் ஈடுபட இருந்தனர். ஆனால் அது கைவிடப்பட்டு வல்லரசு திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் சன்னி தியோலை வைத்து ரீமேக் செய்தார். அதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுனை இயக்கிய திரைப்படம் தான் "அரசாட்சி". இதுவரையில் எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவிற்கு கரண், ரகுவரன், ஆனந்தராஜ், எம்.என். நம்பியார், நாசர், பொன்னம்பலம், `மன்சூர் அலிகான், டெல்லி கணேஷ், ராஜன். பி. தேவ், தேவன், மணிவண்ணன் என 14 வில்லன்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லாரா தத்தா அதற்கு பிறகு ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் லாரா தத்தா. தனது சிறப்பான நடிப்பிற்காக பல பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
தாமதமான படத்தில் ரிலீஸ் தேதி :
அரசாட்சி திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 2003ல் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டாலும் சில சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தாமதமாகி 2004 செப்டம்பர் மாதம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டதாலும் படம் வெளியாவது சற்று தள்ளி போனது என கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானதால் இயக்குனர் மகராஜன் இந்த இடைப்பட்ட இடைவெளியில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "ஆஞ்சநேயா" திரைப்படத்தை முடித்தே விட்டார்.