திருப்பதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் தரிசனம் செய்த நிலையில், அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. 


நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயில் ஏழுமலையானை வழிபட்டனர். தரிசனத்திற்கு பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது என்றும் என்னுடைய சகோதரி ரேவதி சுரேஷின் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட தமிழ் செய்தியாளர் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேட்டி அளிக்குமாறு கேட்டார். அதற்கு கீர்த்தி, திருப்பதியிலே இருக்கேனே என்று பதில் அளித்தார். தற்போது இந்த வீடியோ இணைத்தில் வைரல் ஆகி வருகிறது.






கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


நடிகை மேனகா சுரேஷின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷூக்கு ரஜினி முருகன் படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். 


கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் ‘தசரா’ படம் வெளியானது. இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது தெலுங்கில் போலோ ஷங்கர் படத்திலும், தமிழில் மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவோல்வர் ரீட்டா ஆகிய படங்களிலும் கீர்த்தி படு பிஸியாக நடித்து வருகிறார்.