தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மம்தா மோகன் தாஸ்.


பன்முகத் திறமை கொண்டவர்


மலையாளத்தில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான மம்தா, தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார்.


தொடர்ந்து மாதவனுடன் ’குரு என் ஆளு’, அருண் விஜய்யுடன் ’தடையற தாக்க’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். மற்றொருபுறம் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கோலோச்சியதுடன், 2008ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.




மேலும் விஜய்யின் வில்லு படத்தில் இடம்பெற்ற ’டாடி, மம்மி வீட்டில் இல்ல’ உள்ளிட்ட சில பாடல்களையும் பாடியுள்ள மம்தா, பன்முகக் கலைஞராக தென்னிந்திய சினிமாவில் வலம் வரத் தொடங்கினார்.


புற்றுநோய் பாதிப்பு


ஆனால் 2009ஆம் ஆண்டு ஹாட்ஜ்கின் லிம்போமா (Hodgkin’s Lymphoma) எனப்படும் நிணநீர்த்திசு புற்றுநோயால் மம்தா திடீரென பாதிக்கப்பட்ட நிலையில், அவரது மலையாள, தமிழ் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.


தொடர்ந்து புற்றுநோயுடன் போராடி வென்ற மம்தாவை மீண்டும் 2013ஆம் ஆண்டு புற்றுநோய் தாக்கியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிகிச்சைப் பெற்று வந்த மம்தா பின் அங்கேயே வசிக்கத் தொடங்கினார்.




அடுத்து வந்த ஆண்டுகளில் தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கிய மம்தா, இறுதியாக தமிழில் ’எனிமி’ படத்தில் நடித்திருந்தார்.


அரிய வகை நோய்


இந்நிலையில் தற்போது ’விடிலிகோ’ (vitiligo) எனப்படும் நிறமிழக்கும் அரிய வகை நோயால் மம்தா பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக இது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த மம்தா, ”அன்பு சூரியனே, நான் முன் எப்போதும் இல்லாத வகையில் உன்னை இப்போது அணைத்துக் கொள்கிறேன். அதனால் தான் இதனைக் கண்டுபிடித்துள்ளேன். நான் நிறத்தை இழந்து வருகிறேன்…


உந்தன் முதல் செங்கதிர் பனிமூட்டம் வழியே வருவதைக் காண, தினம் காலையில் உனக்கு முன்பே நான் எழுந்து கொள்கிறேன். உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்குக் கொடு..


உன் அருளால் என்றென்றும் நான் கடமைப்பட்டவளாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






புற்றுநோயுடன் இருமுறை போராடி வென்று வந்த மம்தா தற்போது மீண்டும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மம்தாவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


எனினும் மம்தாவின் போராடும் குணத்தைக் கண்டு வியந்து அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் அவரைப்  பாராட்டியும் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.