ஏபிபி-யின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு இன்று (அக்.12) சென்னையில் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், இயக்குனருமான ரேவதி தனது திரைத்துறையில் 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 


 நடிகை ரேவதி


சினிமாவில் பெண்களின் பங்கு குறித்து பல்வேறு கோணங்களில் பேசினார் ரேவதி. அப்போது  தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். இஞ்சு இடுப்பழகி பாடலில் கமல் ரேவதியிடம் பாட்டு பாட கேட்டுக்கொள்வார். அப்போது பாடத் தொடங்கும் ரேவதி கமல் தனது கையை பிடித்தவுடன் அவரது குரல் தடுமாறும். அப்போது ரேவதி பேசும் காத்துதா வருது என்கிற வசனம் இன்றுவரை அவரது புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்று. இந்த காட்சி உருவான விதத்தை குறித்து பேசினார் ரேவதி.


ஒரே  நேரத்தில் இரண்டு படங்கள்


 "தேவன் மகன் படத்தில் எனக்கு பதிலாக இன்னொரு புகழ்பெற்ற நடிகர் இருந்தார். ஆனால் அவரிடம் டேட்ஸ் இல்லையென்பதால் இந்தப் படத்தில் நான் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். இந்த முடிவு எடுக்கப்பட்ட உடனே ஒட்டுமொத்த கதையையும் கமலும் இயக்குநர் பரதனும் சேர்ந்து மறுபடியும் எழுதினார்கள். தேவர் மகன் திரைப்படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் ரெக்கார்டிங் நடக்கும்போது இளையராஜா என்னை வரச் சொல்லியிருந்தார். ஆனால் அப்போது தான் பாலுமகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடித்து வந்ததால் என்னால் போக முடியவில்லை. அதன் பிறகு படத்திற்கான டப்பிங் செய்தபோது இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை நான் பாடினேன். கமல்ஹாசன் என்னை இந்தப் பாடலை அவருடன் சேர்ந்து பாடச் சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஜானகி அம்மா இந்தப் பாடலை பாடினார்கள். அவர் பாடியதற்கு ஏற்ற வகையில் உதட்டசைவை கொண்டு வருவதற்கு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. கமல்ஹாசன் எனக்கு உதவிகரமாக இருந்தார்." என்றார்.