பிரதமர் நரேந்திர மோடியின் பயோ பிக் உருவாக உள்ளதாகவும் அதில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பெரியாரின் தீவிர விசுவாசியான நடிகர் சத்யராஜ் இப்போது மோடியின் பயோ பிக்கில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் படத்தில் பெரியார் நடித்தார் என்பதைவிட பெரியாரா வாழ்ந்திருந்தார் சத்யராஜ். அதுமட்டுமல்லாமல் எந்த அரசியல் மேடைகளுக்கு சென்றாலும் அங்கு பெரியாரின் புகழ் பாடாத சத்யராஜை பார்க்க முடியாது என்றே சொல்லலாம். அப்படி இருக்கையில் இப்போது இந்துதுவா கொள்கையை குறிக்கோளாக கொண்டுள்ள மோடியின் கதாப்பாத்திரத்தில் அவர் எப்படி நடிக்கிறார் என்பதே அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜை ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினோம். இந்த கேள்விக்கு பதிலளித்த அவர் , "பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சத்யராஜ் நடிப்பது பற்றி எங்களுக்கும் தகவல் தான் வந்துள்ளது. இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.
மேலும் கொள்கை ரீதியாக பெரியாரை பின்பற்றும் சத்யராஜ் எப்படி மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்? என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "கொள்கை ரீதியாக பார்ப்பதை விட இதனைஒரு கேரக்டராக பாருங்கள். சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்தால் நிஜத்தில் வில்லனாக தான் இருக்க வேண்டுமா என்ன?. அந்த மாதிரி தான் இதுவும்" என பதிலளித்தார்.