கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பூகம்பமாக வெடித்து வருகிறது. இது குறித்து கலாஷேத்ரா முன்னாள் மாணவி மற்றும் திரை பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 


கலாஷேத்ரா விவகாரம் குறித்து அபிராமி பேசுகையில் "ஒரு முன்னாள் மாணவியாக நான் படித்த கல்லூரிக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். பலரும் நான் இதை பப்ளிசிட்டிக்காக செய்கிறேன் என கூறுகிறார்கள். இதனால் எனக்கு பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. எனக்கு எதுக்கு வம்பு என நினைத்து இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து இருக்கலாம். ஆனால் கலாஷேத்ரா யக்! சங்கி வங்கி என தொடர்ச்சியாக அனைவரும் சொல்வதை கேட்கும்போது அது என்னை எமோஷனலாக பாதிக்கிறது. ஒரு மாணவியாக என்னுடைய கல்லூரிக்கு குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. அதனால் மட்டுமே நான் இங்கு உங்களுக்கு முன் நிற்கிறேன். 



ட்விஸ்ட் செய்யுறது அதிகம் :  


”ஒரு மாணவியாக எனக்கு தெரியும். அந்த கல்லூரியில் எந்த அளவிற்கு ட்விஸ்ட் நடக்கும் என்பது எனக்கு தெரியும். அதை நாங்கள் எங்களுடைய பேட்சில் அனுபவித்துள்ளோம். நிர்மலா டீச்சர் என்னை தொடர்பு கொண்டு ஹரி சாருக்கு எதிராக நான் பேச வேண்டும் என என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் இந்த விஷயத்தில் ஈடுபட விருப்பமில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன். பொய்யான குற்றச்சாட்டை ஒருவர் மீது திணிக்க எந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். மீண்டும் அதே விஷயத்திற்காக என்னை தொடர்பு கொண்டார். ஆனால் நான் அந்த அழைப்பை துண்டித்து விட்டேன்" என்றார்


பொய்யான குற்றச்சாட்டு:


பத்து ஆண்டுகளாக இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. நான் 2010 - 2015 வரையிலான பேட்சில் படித்தவள். 2013ம் ஆண்டு லீலா தாம்சன் என்பவர்தான் இயக்குனராக அந்த சமயத்தில் இருந்தார். அவர் கல்லூரிக்கு எதிராக செயல்களை செய்கிறார் என சொல்லி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது பலரும் அறிந்த விஷயம். இதே நிர்மலா டீச்சர், நந்தினி டீச்சர் மனைவிகள் எங்களை குரூப் குரூப்பாக உட்காரவைத்து எங்களை லீலா மேடத்திற்கு எதிராக மிரட்டி கையெழுத்து போட வைத்தார்கள். அதற்கு எதிராக 5 மாணவிகள் மட்டுமே குரல் கொடுத்தார். அந்த சமயத்தில் கடுமையாக போராடி லீலா மேடம் அந்த குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வந்தார். அதனால் அவர்களுடைய ட்ராமா எல்லாம் எனக்கு நன்றாக தெரிந்ததால் அதே போன்ற விஷயத்தை தற்போது ஹரி சாரிடம் செய்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியின்போது ஹரி சாரை நீங்கள் இயக்குனராக இருந்து எடுத்து நடத்துங்கள் என ஜனார்த்தனன் சார் கூறியதுதான் மீண்டும் இவர்களை இந்த ட்ராமாவை செய்ய தூண்டியுள்ளது. ஹரி சார் இயக்குனராக ஆகிவிட்டால் நம்மால் ஆகமுடியாதே என எரிச்சல்தான் இவர்களை இப்படி மாணவிகளை தூண்டிவிட்டு செய்த வைத்துள்ளது.


பலிக்கடாவாகும் மாணவிகள் :


பலரும் நான் மாணவிகளுக்கு ஆதரவாக இல்லை என குற்றம் சாட்டுகிறார்கள். மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எனக்கு நிறைய அக்கறை இருக்கு, ஒரு சிலர் தூண்டப்பட்டுள்ளார். ஹரி பத்மன் சார் எனக்கும் கிளாஸ் எடுத்தவர். இது வரையில் நானோ அல்லது எனது தோழிகளோ யாருமே பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததில்லை. அதனால் நான் ஒரு முன்னாள் மாணவி என்ற உரிமையில் அந்த மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அந்த கல்லூரியில் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது என்பது காலங்களாக நடந்து வரும் ஒன்று. அதில் மாணவிகளை பலிக்கடாவாக மாற்றுகிறார்கள் அது நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை என பேசியிருந்தார் அபிராமி வெங்கடாச்சலம்.