வயது தடையெல்லாம் தாண்டி ’பொன்னியின் செல்வன்’ மூலம் சமீபத்தில் ரீ எண்ட்ரி கொடுத்து நந்தினியாக நம்மை மீண்டும் ஆக்கிரமித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன் 49ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளார்.
கர்நாடகாவில் பிறந்து உலக அழகிப் பட்டத்தை தன் 21ஆம் வயதில் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.
இயக்குநர் மணிரத்னத்தின் 'இருவர்' படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் படங்கள் முதலில் இந்தியில் தோல்வியையே தழுவின. தொடர்ந்து சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய், 'ஹம் தில் தே சுக்கே சனம்', ’தால்’, 'தேவ்தாஸ்', என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.
ஆனால் காதல் வாழ்வில் சில கசப்பான அனுபவங்களைப் பெற்ற அவர் தொடர்ந்து ஹாலிவுட், இந்தி, தமிழ் என முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனுடன் பண்டி அவுர் பப்லி படத்தில் பாடல் ஒன்றில் இணைந்து பணிபுரிந்தபோது அவருடன் காதல் வயப்பட்டார்.
பாலிவுட்டின் ஆதர்ச ஜோடியாக உருவெடுத்த இவர்கள், சில ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஆராத்யாவுக்கு தற்போது 10 வயதாகிறது.
இந்நிலையில் நேற்று (அக்.01) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஆடம்பரமற்ற க்யூட்டான வாழ்த்துச் செய்தியை நடிகர் அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
புடவை அணிந்து தலையில் பூ வைத்தபடி ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருக்கும் கருப்பு வெள்ளைப் புகைபடத்தைப் பகிர்ந்து ”இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வைஃபி... அன்பு, ஒளி, அமைதி, வெற்றி அனைத்தையும் பெறு” என அழகாக வாழ்த்தியுள்ளார்.
அபிஷேக்கின் இந்தப் பதிவு நெட்டிசன்களைக் கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது.