தமிழ் சினிமா வரலாற்றில் நட்பு பற்றிய ஏராளமான படங்கள் வெளியாகி விட்டது. அதேபோல் முக்கோண காதல் கதைகள் அடங்கிய படங்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இரு ஜானரிலும் வெளியாகி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ‘காதல் தேசம்’ இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


காதல் - நட்பு 


90களின் பிற்பாதியில் தனித்துவமான காதல் படங்களுக்காக அறியப்பட்டவர் இயக்குநர் கதிர். இவரின் 3வது படமாக 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் வெளியானது. அப்பாஸ், வினீத்,தபு, வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் , சின்னி ஜெயந்த் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.


ஒரே பெண்ணை இரண்டு நண்பர்கள்  காதலிக்க, அதனால் நட்பில் ஏற்படும் விரிசல், இறுதியில் வென்றது நட்பா? காதலா? என்பதை அழகாக காட்சிகளின் வழியே சொல்லியிருப்பார் கதிர். 


படத்தின் கதை


வெவ்வேறு வர்க்க, சமூகப் பின்னணியைக் கொண்ட அப்பாஸ், வினீத் இரு வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். கல்லூரி பெருமிதத்தால் முதலில் மோதிக் கொள்ளும் இருவரும், பின்னால் புரிதல் உணர்வால் இணைபிரியா நண்பர்களாக மாறுகின்றனர். இப்படியான நட்பு ஒரே பெண்ணை (தபு) இருவரும் காதலிப்பதால் மீண்டும் பிரிவை நோக்கி செல்கிறது. ஆனால் தபுவோ எப்படி இவர்களை காதலை கடந்து நட்பை மீட்டெடுக்கிறார் என்பதே காதல் தேசம் படத்தின் கதை. காதல் மற்றும் நட்புக்கு இப்படத்தில்  சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.


வடிவங்களும் வழிமுறைகளும்  காலத்துக்கேற்ப மாறினாலும்  நட்பும் காதலும் காலத்துக்கும் நின்றிருக்கும் வகையில் கையாளப்பட்டிருந்தது. சென்னை என்றாலும், கல்லூரி வாழ்க்கை என்றாலும் இப்படித்தான் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்திய படங்களில் வித்தியாசமானது காதல் தேசம் படம். ஆனால் கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டமும், ஏக்கமும் கனவுகளும் என படம் முழுக்க ஒரு பாசிட்டிவ் வைப் மோடில் தான் கதை கையாளப்பட்டிருக்கும். 


கொண்டாடப்பட்ட பிரபலங்கள் 


இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகராக அப்பாஸ் அறிமுகமானார். அவரின் மேனரிசம் இளம் பெண்களிடையே தனி ரசிகைகள் கூட்டத்தை உருவாக்கியது. சினிமாவின் ஆணழகன் நாயகர்களில் ஒருவராகவும் கொண்டாடப்பட்டார். அதேபோல் இந்திப் படங்களில் நடித்து வந்த தபுவுக்கும் இதுதான் முதல் தமிழ் படமாகும். 


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்டைம் பேவரைட் பாடல்களை காதல் தேசம் படத்தில் வழங்கியிருந்தார். கல்லூரிச் சாலை என்ற அறிமுக பாடல் தொடங்கி என்னைக் காணவில்லையே நேற்றோடு, முஸ்தபா முஸ்தபா ஆகிய பாடல்களும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக காலத்துக்கேற்ற கவிஞர் என கொண்டாடப்படும் வாலியின் வரிகளில் எழுதப்பட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் இல்லாமல் கல்லூரி ஃபேர்வல் நிகழ்வுகள் இல்லை என்னும் அளவுக்கு காலத்துக்கு நிலைத்து நிற்கிறது, இந்த பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிகவும் அழகாக கவிதையாக இருந்தது. 


கல்லூரிக் கால நட்பையும் காதலையும் நினைத்து மகிழ்ச்சியும், கவலையும் என நினைத்துப் பார்க்க வைத்த  'காதல் தேசம்'  படம் என்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.