பிரபல இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் குறித்தான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்


சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் செல்வராகவன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் செல்வராகவன், “ புதுப்பேட்டை 2 படம்தான் முதலில் வரும் என்றும் அதற்கு பிறகுதான் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என்றும் கூறினார். 




தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் பலரது ஃபேவரைட். இதில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகும் என்று முன்பே இயக்குநர் செல்வராகவன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்தப்படங்கள் குறித்தான அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கும் செல்வராகவன் முன்னதாக பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் படங்களில் நடித்திருந்தார். 




இதனிடையே தனது தம்பியான தனுஷை வைத்து  ‘நானே வருவேன்’படத்தை இயக்கி முடித்திருக்கும் செல்வராகவன் அந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார்.முன்னதாக தனுஷின் மாறன் படம் வெளியாகி மிகப் பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


 






இந்தப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் நிறுவனம் 24 கோடிக்கு வாங்கி இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.