ஃபகத் ஃபாசில்


ஆவேஷம் படத்தில் ரங்காவாக வந்து இன்னொரு முறை தமிழ் மற்றும் மலையாள திரை ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஃபகத் ஃபாசில். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த இரண்டு படங்களில் நூறு கோடி வசூலை ஈட்டியுள்ளார். அடுத்தபடியாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். தமிழைப் பொறுத்தவரை மாமன்னன் படத்தைத் தொடர்ந்து இன்னொரு அழகான படத்தில் தான் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக நடித்தார் ஃபகத் ஃபாசில்.


ரத்னவேலுவை கொண்டாடித் தள்ளிய சாதிய ஆதரவாளர்கள்


மாமன்னன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் இப்படம் வடிவேலுவுக்கு யாரும் கொடுக்க முடியாத ஒரு கம்பேக் ஆக அமைந்தது . மேலும் இதுவரை யாரும் கற்பனை செய்து பார்த்திர முடியாத ஒரு கதாபாத்திரம் அவருக்கு வழங்கப் பட்டது. வடிவேலு தவிர்த்து இப்படத்தில் வில்லனாக நடித்த ஃபகத் ஃபாசில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.  எதிர்பார்த்த அளவிற்கு ஃபகத் ஃபாசில் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததது என்பது திரைப்பட ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் மறுபக்கம் சாதியை ஆதரிக்கும் மனப்பாண்மையில் பலர் ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். ஃபகத் ஃபாசிலின் உடல்மொழி, தோற்றம் , நடிப்பு ஆகியவை எல்லா ஆதிக்க சாதியிலும் இருக்கும் அப்படியான ஒரு நபரை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்த காரணத்தினால் எல்லா ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவர்களும் தங்கள் சாதிக்கென இருக்கும் பாடல்களுடன் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கிவிட்டார்கள். மாமன்னன் படம் ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து இந்த போக்கு இன்னும் அதிகரித்து சமூக வலைதளங்களில் ஃபகத் ஃபாசில் வைரலாகினார். இன்னும் சிலர் அவரது சமூக வலைதள பக்கத்தில் சென்று கமெண்ட் செய்யத் தொடங்கினார்கள். தான் நடித்த படம் என்பதால மாமன்னன் படத்தில் தனது கெட் அப் ஐ ப்ரோஃபைல் பிக்ச்சராக வைத்திருந்தார் ஃபகத். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் அந்த புகைப்படத்தை நீக்கினார். 


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடியது குறித்து ஃபகத் ஃபாசில் பேசியுள்ளார்.


ரசிகர்கள் அந்த கேரக்டரை சரியா புரிஞ்சுக்கல






இந்த நேர்காணலில்  ஃபகத் ஃபாசில்  “நாம் ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படியானது என்பது தெரிந்துதான் நடிக்கிறோம்.  மாமன்னன் படத்தில் ரத்தினவேலு கதாபாத்திரல் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவன் , அவன் கெட்டவனாக இருக்கும் தருணமும் இருக்கிறது. அதே நேரத்தில் அவன் பனவீனமானவனாக இருக்கும் தருணமும் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அவனுடைய இரு தன்மைகளையும் புரிந்துகொண்டு அவனை ஒரு மனிதனாக பார்த்தார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் அவனை தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக மட்டுமே பார்த்தது, அந்த கதாபாத்திரத்தை அப்படி கொண்டாடியது, என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. அதே நேரத்தில் அது என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.