1990ல் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகள் அஜித்திற்கு பெரிய சவால்களே இருந்தன. ‛பத்தோடு பதினொன்று... அத்தோடு இதுவும் ஒன்று’ என்கிற மாதிரி தான் அஜித்தின் பங்களிப்பு சினிமாவில் இருந்தது. 1995ல் பாலசந்தர் பட்டறையிலிருந்து வந்த வஸந்த், ஆசை என்கிற படத்தை எடுத்தார். 


படத்தின் கதாநாயகன், நல்ல அழகனாக, அப்பாவியாக, ஆக்ரோஷம் கொண்டவனாக இருக்க வேண்டும். சுற்றிமுற்றி பார்த்ததில் வஸந்த் பார்வையில் சிக்கியது அஜித். அன்றைய தினம் அவர் அஜித்குமார் என்றே அழைக்கப்பட்டார். சுபலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி என மிகக்குறைந்த நடிகர்களை வைத்து, மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை ஆசை. எப்படி ஒரு திரைக்கதை இருக்க வேண்டும் என்பதற்கு ஆசை மூலம் பாடம் எடுத்தவர் வஸந்த். இன்றும் ஆசை திரைக்கதை புத்தகமாக விற்கப்படுகிறது. 






வீட்டின் மூத்த பெண் ஒருவள் ராணுவ வீரரை திருமணம் செய்து டில்லியில் வசிக்கிறாள். அவளது திருமணத்தில் தந்தைக்கு உடன்பாடில்லை. அந்த தந்தை தனது இளைய மகளோடு சென்னையில் வசிக்கிறார். இளைய மகளை எதேட்சையாக பார்க்கும் வாலிபர் ஒருவர், காதலில் விழுகிறார். அந்த பெண்ணும் காதலில் விழ; தந்தையிடம் அனுமதி கேட்கிறார். இதற்கிடையில், பிரிந்து நின்ற அக்கா, மீண்டும் தந்தையோடு சேர்கிறாள். அவளது கணவன் மீது, தந்தைக்கு பெரிய மதிப்பு ஏற்படுகிறது. 


அதே நேரத்தில், அந்த மாப்பிள்ளை, மனைவியின் தங்கை மீது ஆசைப்படுகிறான். அதற்கான மனைவியை கொலை செய்கிறான். அவள் விரும்பும் இளைஞனை தவறானவனாக சித்தரிக்கிறான். மனைவியின் தங்கையை அடைய ராணுவ வீரன் செய்யும் திட்டங்களும், அதை உடைக்க, இளம் பெண்ணின் காதலன் செய்யும் முயற்சிகளும் தான் கதை. ஒரு குறுகிய வட்டத்தில், மிக அழகாக கதையை சொல்லி, திரைக்கதையை நகர்த்தியிருப்பார் இயக்குனர் வஸந்த். 


ராணுவ வீரனாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவியாக ரோகினி, தங்கையாக சுபலட்சுமி, தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், காதலனாக அஜித். இது தான் படத்தின் கதாபாத்திரங்கள். த்ரில்லராக ஒரு காதல் கதை. அதுவரை அடையாளம் காணப்படாத அஜித், பின்னர் ஆசை அஜித்குமார் என்கிற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். அந்த அளவிற்கு, ‛கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்துப் போட்டவனாக’ அஜித்தை மாற்றியது ஆசை. 






அஜித் இன்னிங்சை தொடங்கிய ஆசை திரைப்படம், இன்று இதே நாளில் , 1995 செப்டம்பர் 8 ம் தேதி வெளியானது. தேனிசை தென்றல் தேவாவின் இசையில்  பாடல்களும், பின்னணியும் ஆசையை ஆசை ஆசையாய் மாற்றியது. மணிரத்னம்-எஸ்.ஸ்ரீராம் இணைந்து ஆலயம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜீவா. இதில் ஸ்பெஷல், கதாநாயகன் பெயரும் ஜீவா தான். 


வெறும் 2 கோடி ரூபாய் செலவில் எடுத்து, ரூ.5 கோடி வருவாய் ஈட்டியது ஆசை. ஆசை நாயகன், லக்கி ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், தல, அஜித், இப்போ ஏகே என பல பட்டங்களோடு அஜித் வலம் வந்த இந்த பாதையில், ஆசை அவருக்கு மிக மிக முக்கியமான திரைப்படம்!