Aarudhra Gold Scam: ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10-ஆம் தேதி துபாயில் இருந்து இந்தியா திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி, ஒவ்வொரு முதலீட்டாளரிடமும் தலா ரூ. 1 லட்சம் என பெற்று கொண்டு,  ரூ.2, 438 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவராக உள்ள ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் ஆர்.கே.சுரேசுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த நோட்டீசை திரும்ப பெற உத்தரவிடக்கோரி மற்றொரு வழக்கை ஆர்.கே. சுரேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.


அதில் பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், படத்தின் பணிக்காக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும், ஆருத்ரா மோசாடிக்கும் தனக்கும்  எந்த தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காகவே துபாயில் உள்ளதாகவும், ஆனால், தான் நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் இந்தியா வந்தால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால், லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 


இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாகவும், இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.  மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதி நவம்பர் 8 தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.