பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அமீர்கான், திரைப்படத் தயாரிப்பாளரான தன் தந்தை படம் தயாரிப்பதற்காக கடன் வாங்கி அதனை மீண்டும் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டது குறித்து நினைவுகூர்ந்து கண் கலங்கியுள்ளார்.


அமீர்கான்:


பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் கோலோச்சி வந்த அமீர் கான், இந்தி சினிமாவின் ஆல்டைம் க்ளாசிக் மெகா ஹிட் படமான ’யாதோன் கி பாரத்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தின் இயக்குநர் அவரது மாமா நசீர் ஹூசைன்.


தொடர்ந்து 1988ஆம் ஆண்டு ’கயாமத் சே கயாமத் தக்’ படம் மூலம் ஜூஹி சாவ்லாவுடன் அறிமுக நாயகனாக பாலிவுட் பயணத்தில் கால் பதித்தார் அமீர் கான். இந்தியா முழுவதும் பட்டி தொட்டியெங்கும் தன் முதல் படத்திலேயே போய் சேர்ந்த அமீர்கான், தொடர்ந்து சாக்லேட் ஹீரோவாகவும், பின் டிராக் மாறி இயக்குநர்களின் ஹீரோவாகவும் தன்னைத் தகவமைத்து ஹிட் கொடுத்து பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.


 






இந்நிலையில், முன்னதாக தன் தந்தை குறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் நினைவுகூர்ந்த அமீர் கான், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமீர் கானின் தந்தையான தஹீர் ஹூசைன், பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகக் கலைஞராக விளங்கியவர்.


அப்பாவை நினைத்து கவலை:


என் அப்பா மிக எளிய மனிதர். அவர் சிக்கலில் இருப்பது எங்களுக்கு வலிக்கும். அப்பாவைப் பார்க்கும்போது தான் என் சிறு வயதில் மிகவும் கவலையாக இருக்கும்.  கடன் கொடுப்பவர்கள் தொடர்ந்து அழைப்பார்கள். என் அப்பா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்ந்து பதில் அளிப்பார்” எனக் கூறி கண் கலங்கியுள்ளார்.


மேலும் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தன் பள்ளிக்கட்டணம் மட்டும் தவறாமல் செலுத்தப்பட்டது பற்றியும், வளரும் பருவத்தில் நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில்  ‘வானத்தைப் போல’ பட பாணியில் தனக்கு நீளமான பேண்ட் வாங்கி அணிவித்தது குறித்தும் அமீர் கான் நினைவு கூர்ந்துள்ளார். 


அமீர் கான் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா படம் திரையரங்குகளில் வணிகரீதியாக தோல்வியைத் தழுவிய  நிலையில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.