ஆமீர் கான்
பாலிவுட் திரையுலகில் கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் ஆமீர் கான். மற்ற பாலிவுட் நடிகர்களைப் போலவே கமர்ஷியல் ரொமாண்டிக் நடிகராக தனது பயணத்தை தொடங்கினாலும் குறிப்பிடத் தகுந்த சில படங்கள் மற்ற நடிகர்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகின்றன. லகான் , ரங் தே பசந்தி , தாரே ஜமீன் பர் , கஜினி , 3 இடியட்ஸ் , பி.கே , தங்கல் உள்ளிட்ட படங்கள் ஆமீர் கான் நடிப்பிற்கு சிறந்த உதாரணங்கள். பாலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக இன்றுவரை தங்கல் படம் இருந்து வருகிறது. மற்ற நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று என படங்களில் நடித்து வரும் சூழலில் குறைவாக நடித்தாலும் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
லவ் டுடே இந்தி ரீமேக்
ஆமீர் கானைத் தொடர்ந்து அவரது மகன் ஜூனைத் கான் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்தியில் அவர் நடித்த மகாராஜ் வெப் சீரிஸ் மக்களிடம் கவனம் பெற்றது. தற்போது தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் ஜுனைத் கான் நடித்துள்ளார். இந்தியில் இப்படத்திற்கு லப்யாப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜூனைத் கான் நாயகனாகவும் மற்றும் ஶ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது .
புகைப்பிடிப்பதை கைவிடும் ஆமீர் கான்
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆமீர் கான் தனது மகனின் படம் வெளியாகும் இந்த தருணத்தில் தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இருப்பதாக தெரிவித்துள்ளார் " நான் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் எனக்கு புகை பிடிப்பது ரொம்பவும் பிடிக்கும் என்பது தான் உண்மை. இத்தனை ஆண்டுகளாக நான் புகைபிடித்து வந்திருக்கிறேன். ஆனா இது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. யாருமே இதை பழகக் கூடாது. இந்த கெட்ட பழக்கத்தை நான் கைவிட்டுவிட்டேன் என்பதை நான் சந்தோஷமாக தெரிவித்துக் கொள்கிறேன். இதை கேட்கும் உங்களிடமும் இந்த பழக்கத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். என் மகனின் படம் வெளியாவது இந்த பழக்கத்தை கைவிட எனக்கு ஒரு நல்ல காரணமாக அமைந்தது. அதனால் அவன் கரியர் சிறப்பாக தொடங்கினாலும் இல்லை என்றாலும் இந்த பழக்கத்தை நான் விட்டுவிட முடிவு செய்திருக்கிறேன். " என ஆமீர் கான் தெரிவித்துள்ளார்