மலையாளம், தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


உலகப் புகழ்பெற்ற நாவல்:


தரமான சினிமாக்களை தொடர்ந்து வழங்கி வரும் மலையாள திரை உலகில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ கேரளாவில் இருந்து வேலை தேடி சவுதி அரேபியாவுக்கு  செல்லும் புலம்பெயர் தொழிலாளர் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக சிக்கிக் கொள்வதை பேசும் இந்தப் படத்தின் கதை, எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது.


குடும்பம், மனைவி, செழிப்பான சொந்த ஊரைப் பிரிந்து சவுதிக்கு சென்று அங்கு வறண்ட பாலைவனத்தில் ஆடு மேய்த்து பாலைவனச் சிறையில் கொத்தடிமையாக அவதிப்படும் இஸ்லாமிய இளைஞரான ‘நஜீப் முகம்மது’ எனும் பாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.




 
2009ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வென்ற இந்த நாவல் பல வாசகர்களையும் உலுக்கியது, ஆனால் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த நாவல் தடை செய்யப்பட்டுள்ளது. 


உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், அடிமையாக சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளியின் துயரம், தனிமை, இறை நம்பிக்கை, மனித மனங்களின் கோரமுகம் என உணர்ச்சிக்குவியலாகவும் தத்துவார்த்தரீதியிலும் அணுகி உலக அளவில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளது.


பிருத்விராஜின் கடின உழைப்பு 


இந்நிலையில், இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் மலையாள சினிமா உலகையும் தாண்டி எழுந்தன. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பிருத்விராஜின் தத்ரூபமான நடிப்பில் மிரள வைக்கும் ட்ரெய்லர் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்ற இயக்குநர் ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நடிகை அமலா பால் பிருத்விராஜூக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.


 



லீக்கான காட்சிகள்


முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அமெரிக்க சினிமா நிறுவனம் ஒன்று போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளுக்காக அனுப்பப்பட்ட காட்சியை லீக் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இயக்குநர் ப்ளெஸ்ஸியும் வருத்தம் தெரிவித்த நிலையில், இந்தக் காட்சிகள் அதிகாரப்பூர்வமாக ட்ரெய்லராக வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.


இந்தப் படத்தை பிருத்விராஜை வைத்து இயக்கப்போவதாக 2010ஆம் ஆண்டே இயக்குநர் ப்ளெஸ்ஸி அறிவித்த நிலையில், பின் பல காரணங்களால் இந்த முயற்சி தொடர்ந்து தள்ளிப்போனது, இந்நிலையில் தற்போது இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படம் தேசிய விருது தொடங்கி ஆஸ்கர் விருதுகள் வரை நிச்சயம் வாரிக்குவிக்கும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.