ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடிகர் கார்த்திக்கை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் நினைத்த நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார் என இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

பாஸ் என அழைக்கும் கார்த்திக்

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், “உதவி இயக்குநராக நான் இருந்தபோது அறிமுகமாகி இன்று வரை எங்களுக்குள் நல்ல பழக்கம் இருக்கிறது. இப்ப நான் போன் பண்ணினாலும் என்ன பாஸ் என கேட்பார். சுந்தர்.சி தான் என்னிடம் கார்த்திக் தனக்கு நெருக்கமானவர்களிடம் பாஸ் பாஸ் என பேசுவார் என கூறினார். நான் அவருடன் மாஞ்சா வேலு என்ற ஒரு படத்தில் தான் வேலை பார்த்தேன். அவ்வளவு தூரம் எனக்கு நண்பராகி விட்டார். 

ஷங்கர் படத்துக்கு மறுப்பு

ஒரு கட்டத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்கு முதலில் சுரேஷ் கோபி கேரக்டரில் கார்த்திக் தான் நடிக்க வேண்டியது. அந்த படத்தின் ஷூட்டிங் முன்பு ஷங்கர் எனக்கு போன் பண்ணி பேசினார். கார்த்திக்கிடம் பேச வேண்டும். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. என்னுடைய உதவி இயக்குநர்கள் உன்னை கேட்டால் அவரை சந்தித்து விடலாம் என சொன்னார்கள். கொஞ்சம் பேச வேண்டும். கேட்டு சொல்லுயா என தெரிவித்தார். 

Continues below advertisement

நான் உடனடியாக மெசெஜ் அனுப்பினேன். உடனே போனில் திரும்பி அழைத்தார். என்ன பாஸ் என கேட்க, நான் விஷயத்தை கூறினேன். பின்னர் நான் தனிப்பட்ட முறையில் ஒரு தகவலை சொன்னேன். அதாவது ஷங்கர் ஒரு பெரிய இயக்குநர், நீங்கள் ஒரு பெரிய நடிகர். இருவரும் ஒருவரின் அலுவலகத்துக்கு இன்னொருவர் செல்வது என்பது நன்றாக இருக்காது. இரண்டு பேரும் ஒரு பொது இடத்தில் சந்தியுங்கள் என ஐடியா சொன்னேன். ஆனால் கார்த்திக் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் ஷங்கர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் வர ரெடி என சொன்னார். நான் இதே விஷயத்தை ஷங்கரிடம் சொன்னேன். அவரோ, கார்த்திக் நம்மெல்லாம் பார்க்கும்போது வளர்ந்த ஹீரோ, அவரின் அலுவலகத்திற்கு நான் வருகிறேன் என சொன்னார்.  இரண்டு பேரும் சந்தித்தார்கள். ஐ படத்தின் கதையையும் ஷங்கர் சொன்னார். அந்த கேரக்டர் அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் பண்ணவில்லை. 

ஐ படம் 

கடந்த 2015ம் ஆண்டு பொங்கலுக்கு இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் கூட்டணியில் “ஐ” படம் வெளியானது. எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், ராம்குமார், யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றாலும், கடுமையான விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.