தமிழ் சினிமாவில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 2019 ஆம் ஆண்டு குமுளியில் நடைபெற்ற 'பேய் மாமா' படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலருக்கும் மிகவும் பரிச்சயமான நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். அவரின் த்ரோ பேக் இன்டெர்வியூவில் நடிகர் வடிவேலு உடன் அவருக்கு இருந்த நட்பு குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
தவசி படத்தில் வடிவேலு - கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் வந்த ”இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?” காமெடி என்றுமே எவர்க்ரீன் காமெடி. இந்த படத்தில் கிருஷ்ணமூர்த்தி நடித்தது ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்வு என்பதை பதிவு செய்துள்ளார். " முதல் நாள் என்னிடம் நாளைக்கு இந்த ஷாட்டுக்கு ரெடியாகி வந்துவிடு என சொல்லிவிட்டு சென்றார் வடிவேலு. கொஞ்சம் நேரம் கழித்து வந்த எனது மேனேஜர் சாமி இந்த காட்சியில் மயில்சாமியை நடிக்க வைக்க சொல்லி இயக்குனர் சொல்லியுள்ளார் என சொன்னதும் நான் சரி பரவாயில்லை என சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்.
அடுத்த நாள் எனக்கு அழைப்பு வருகிறது, வடிவேலு செட்டுக்கு வந்து விட்டார் நீங்களும் உடனே வந்து விடுங்கள் என்றனர். ஆனால் நான் வரமுடியாது என சொல்லிவிட்டேன். அங்கு ஷாட்டில் மயில்சாமியை பார்த்து நீ ஏன் இந்த டிரஸ் போட்டு இருக்க? இந்த ஷாட்ல கிருஷ்ணமூர்த்தி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்றுள்ளார் வடிவேலு. உனக்கு வேற ஒரு பிரமாதமான ஷாட் வைத்து இருக்கிறேன் என சொல்லியுள்ளார்.
வடிவேலுவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நீ இப்போ இங்க கிளம்பி வரியா இல்ல நான் வீட்டுக்கு கிளம்பி போய் விடவா என்றார். உடனே நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு டிரஸ் பண்ணிக்கொண்டு போய்விட்டேன். அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் மாடுலேஷன் எப்படி என்பதை எல்லாம் அவர் தான் எனக்கு கற்று கொடுத்தார். நான் ஒரு பைத்தியக்காரன் போல நடிக்கிறேன் என்பது யாரும் கண்டுபிடிக்க கூடாது. அதனால் தான் அவர் என்னை தேர்ந்தெடுத்தார். அந்தத் காமெடி மிகவும் நன்றாக வந்தது" என்றார்.
வடிவேலு உயர முக்கியமான காரணம் அவரின் உழைப்பு மட்டுமே. 'தெய்வ வாக்கு' தான் அவரின் முதல் படம். அதில் நடிக்க அவருக்கு 9000 ரூபாய் தான் சம்பளம். படிப்படியாக தான் அவரின் சம்பளம் உயர்ந்தது. காலங்கள் ஓட ஓட அவரின் சம்பளமும் உயர்ந்தது. தவசி படத்தில் வடிவேலு நடிக்க அவருக்கு 15 லட்ச ரூபாய் பெற்றார் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
வடிவேலுவின் பெரும்பாலான காமெடிகளில் கிருஷ்ணமூர்த்தி நிச்சயமாக இருப்பர். அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு இருந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.