யார் கவிஞர் இசை ?

பிக்பாஸ் தமிழ்  சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கவிஞர் இசையின் கவிதைகளை படிக்கும் படி பார்வையாளர்களுக்கு பரிந்துரைத்திருந்தார். கவிஞர் இசை கோயம்புத்தூரில் இரூகூரைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சத்தியமூர்த்தி. நவீனக் கவிதையின் நீண்ட வரலாற்றில் வரும் இசையின் கவிதைகள் ஆரம்ப கட்ட வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழியும் வாழ்க்கையைப் பற்றிய ஆழ்மான திறப்புகளை நுணுக்கமான அழகியலோடும் அதே நேரத்தில் பொருள்வயப்படுத்தப்பட்ட  நகைச்சுவை சித்தரிப்புகளோடு சொல்பவை. இசையின் ஒரு சில கவிதைகளையும் அவற்றை ஒரு முழுமையான அர்த்தத்தில் எப்படி புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு அறிமுகமாக இந்த தொகுப்பு.

க்ரிஸ் கெயிலிற்குப் பந்து விசுதல்

நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை

சொல்லப் போனால் ஒரு பார்வையாளனாகக் கூட இல்லை

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப் பட்டு

பந்துவீசூமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்

எதிரே க்ரிஷ்கெயில் நின்றுகொண்டிருக்கிறார்

அணித்தலைவர் ஓடிவந்து

பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று

மறுபடியும் வலப்பக்கம் சுழன்று

விழுமாறு வீசச்சொல்கிறார்.

நான் அவரது முகத்தையே பார்த்தேன்

அவர் திரும்பி ஓடிவிட்டார்

எதிரே க்ரிஷ்கெயில் நின்றுகொண்டிருக்கிறார்

அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது

அடேய் சுடையப்பா

இந்த பந்தை வானத்திற்கு அடி 

திரும்பி  வரவே வராதபடிக்கு

வானத்திற்கு அடி.

இந்த கவிதை மற்றவர்களைக் காட்டிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகம் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும். கிறிஸ் கெயிலின் ஆட்டம் சூடுபிடித்தான் எதிரில் நிற்கும் பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபம் தான். கிறிஸ் கெயிலில் மட்டையில் பந்து மாட்டிவிட்டது என்றால் எவ்வளவு திறமையான பந்துவீச்சாளராக இருந்தாலும அவருக்கு கை நடுங்கும். இதில் கொடுமை என்ன வென்றால் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரை மட்டும் வைத்து துவம்சம் செய்வார். விருப்பம் இருக்கோ இல்லையோ தன்னுடைய ஆறு பந்துகளை அவர் வீசியே ஆக வேண்டும். தான் வீசிய பந்து வானத்தில் எங்கோ பறப்பதைப் பார்த்து அவமானத்தாலும் நம்பிக்கையை இழந்து மைதானத்தைவிட்டு ஓட நினைத்தாலும் அந்த ஆறு பந்துகளை வீசித்தான் ஆக வேண்டும்.

இப்போது கிறிஸ் கெயிலின் இடத்தில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் அந்த பந்துவீச்சாளரின் இடத்தின் நம்மையும் வைத்து நினைத்துப் பாருங்கள். எவ்வளவு தான் கம்பு சுத்தினாலும் மனரீதியாக தயான் நிலையில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கும் சவால்கள் ஏதோ ஒரு வகையில் வந்துகொண்டே இருக்கின்றன. அதை சமாளிக்கவும் முடியாமல் எல்லாவற்றையும் விட்டு கண் காணாத இடத்திற்கு போய்விடலாம் என்று தோன்றாதவர்கள் மிகக் குறைவுதான்.

ஆனால் இந்த வாழ்க்கையில் வேறு வழியில்லை அடுத்த பந்தை வீசித்தான் ஆகவேண்டும். ஒரு பாமரனின் நப்பாசையை வெளிப்படுத்தும் வகையில் கவிஞர் கடைசியாக  ’திரும்ப தரைக்கு வரவே வராதபடி வானத்திற்கு அடி என்று எழுதுகிறார். அது எனக்கு நல்லதைக் மட்டுமே கொடு என்று கடவுளைப் பார்த்து வேண்டிகொள்ளும் ஒரு எளிய மனிதரின் வேண்டுதலைப் போன்றது.

ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா?

மேகம் கட்டிலுக்கடியில் தவழ்து போகையில்

அவரது தொந்தி நிலத்தில் தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது

ஏழாவது முறையாக

குளியலறைக்குச் சென்று சல்லடைப் போட்டார்

தன் சக எழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில் 

“பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு

அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்

ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு 

காற்று இந்த மூன்றாவது மாடியில் இருந்து 

அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம்

கண்களைப் பிடுங்கி கீழே வீசிப் பொறுமையாகத் துழாவினார்.

பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார்.

அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல

அவரிடம் இப்போதுகூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது

ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்

இடதுபுற எலாஸ்டிக் பட்டையில் 

அதுபோலவே நூல் பிரித்திட உறுதியாக அவருக்குத் தெரியாது

நாம் அசட்டை செய்வது போலவோ

கேலியடிப்பது போலவோ

அது ஒன்றும் சாதாரண ஜட்டி அல்ல

அவரது இல்லத்து அரசி

அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு

பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.

ஆண்கள் பொதுமாக கடுமையான இறுக்கமான நெஞ்சம் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டே நாம் பார்த்திருக்கிறோம். அல்லது ஆண்கள் எந்த வித கடமையுணர்ச்சியுன் இல்லாமல் அதைப் பற்றி கவலையும்படாதவர்களாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் மனைவியிடம் தன்னாலும் பொறுப்பாக இருக்க முடியும் என்று ஒரு கணவர் சவால் விட்டு அதை காப்பாற்றப்படும் போராட்டத்தை உணர்த்தும் ஒரு கவிதை.

திற

ஒரு காம்பவுண்டு வரிசை வீட்டை

எதெச்சையாக கடக்கும்படி ஆகிவிட்டது

கிரிக்கெட் பந்தென சீறிவந்து

தலையைத் தாக்கியது ஒரு சொல்

“மூடு...”

ஜன்னலில் தெரிந்தாள் ஒரு பதுமை

உண்மையில்

அவள் அதை அவ்வளவு சத்தமாக சொல்ல விரும்பவில்லை

ஆனால்

அவ்வளவு சத்தத்தில் ஒலித்துவிட்டது

அவள் கூனிக்குறுகிப் போய்விட்டாள்

விருட்டென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்

ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி

ஜன்னலை அடைத்து தன்னை சாத்திக் கொண்டாள்

செல்லமே !

“மூடு “ கூட இல்லாமலா

வீட்டில் இருக்க முடியும்

“மூடு” கூட இல்லாமலா

குடும்பத்தில் இருக்க முடியும்

“மூடு” கூட இல்லாமலா

உறவில் இருக்க முடியும்

“மூடு” கூட இல்லாமலா

உயிரோடு இருக்க முடியும்

மூடாதே, திற !

இந்தக் கவிதை வாசகர்களின் பார்வைக்கு விடப்படுகிறது.