அணிந்திருக்கும் ஆடையில்தான் ஆபாசம் இருப்பதாகவும், அதனால் தான் பொறுக்கிப்பசங்க கிண்டல் செய்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்ட ஜீ டிவியின் சீரியலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்


ஒவ்வொரு சேனல்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன.அழுகாச்சி காவியங்களாக இல்லாமல், காதல், ரொமான்ஸ்,பாடல் என்றெல்லாம் சீரியல்கள் வரத்தொடங்கிவிட்டன. சோஷியல்மீடியாக்களை கையில் வைத்துகொண்டு புதுப்புது ப்ரோமோக்களை பதிவிடுவதும், அதன் மூலம் ரசிகர்களை ஈர்ப்பதும் என டிவி சேனல்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்குதான் என்றாலும் சில  நேரங்களில் சீரியல்கள் தவறான கருத்தை காட்சியாக்கிவிடுகின்றன.இது சோஷியல் மீடியாக்களில் பரவி குறிப்பிட்ட சீரியலை சோஷியல் மீடியாவில் கிழித்துத் தொங்கவிடுகின்றனர் இணையவாசிகள்.அப்படி தற்போது சிக்கியுள்ள சீரியல்தான் ஜீ டிவியின்  பேரன்பு சீரியல்.


ஆதரவற்ற பெண்ணான நாயகியை, நாயகனுக்கு அவரது அம்மா கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதும், தனக்கு பிடிக்காமல் அம்மாவுக்காக நாயகன் திருமணம் செய்வதுமென தொடங்குகிறது இந்த சீரியல். பின்னர் நடப்பதுவே சீரியல் பயணம் செய்யும் பாதை. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும்  வைஷ்ணவி தான் பேரன்பு தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக விஜய் வெங்கடேசன் நடிக்கிறார்.
 
சர்ச்சையில் சிக்கிய காட்சி..






இந்நிலையில் தற்போது ஒரு காட்சி சோஷியல் மீடியாவில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன்படி, வானதியும், ராஜேஸ்வரி குடும்பத்துக்கு அடுத்து வர இருக்கும் புது மருமகளும், வானதியும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் வெளியே செல்கின்றனர். அப்போது அவர்களை ரவுடிகள் சிலர் கிண்டல் செய்கின்றனர். இதனால் கோபமடைந்த புது மருமகள், போலீசுக்கு போன் செய்ய முயற்சிக்கிறார். அப்போது குறுக்கிடும் வானதி, சாலையில் இத்தனை பேர் இருக்கும் போது நம்மை கிண்டல் செய்வது ஏன்? உடுத்தியிருக்கும் உடையில்தான் ஆபாசம் என வார்த்தை முத்துகளை உதிர்க்கிறார்.இந்த காட்சியே தற்போது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.


குறிப்பிட்ட காட்சியில் இருவருமே புடவை அணிந்திருக்க, ஒருவர் மட்டும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். அதனை ஆபாசம் என்று குறிப்பிட்டதுமில்லாமல், அதனால்தான் கிண்டல் செய்கிறார் என ரவுடிகளுக்கே முட்டுகொடுக்கும் நாயகியை என்னவென்று சொல்வது என சிலர் பதிவிட்டுள்ளனர். 


நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், 10 மாத குழந்தை முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் இன்றைய காலக்கட்டத்தில் உடையில்தான் ஆபாசம் என மிகவும் பிற்போக்கான கருத்தை பதிவிடும்  இதுமாதிரியான சீரியல்களை தடை செய்ய வேண்டுமென சிலர் ஆவேசமாக பதிவிட்டுள்ளனர்