சென்னை ராயப்பேட்டை பெரியார்திடல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கு வயது 45. இவரது மனைவி பெயர் கலா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ் ஆட்டோக்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிய ராஜூவை உறவினர்கள் ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு ராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய ராஜ் மீண்டும் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக அவர் சிகிச்சை பெற்று வந்த மறுவாழ்வு மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த மறுவாழ்வு மைய நிர்வாகிகள் ராஜை மீண்டும் தங்களது மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை அழைத்துச் சென்ற பிறகு, மறுவாழ்வு மையத்தில் இருந்து கலாவிற்கு அழைப்பு வந்துள்ளது.
அதில், கலாவின் கணவர் ராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலா தனது உறவினர்களுடன் பதற்றத்துடன் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜ் ரத்தக்காயங்களுடன் சடலமாக இருந்துள்ளார். தனது கணவர் உடலில் உள்ள காயங்களை கண்ட கலாவிற்கு அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக, இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, மறுவாழ்வு மையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் கலாவின் கணவர் ராஜை மறுவாழ்வு மைய ஊழியர்கள் கட்டையால் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட ராஜூன் வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த போதை மறுவாழ்வு மையம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், ராஜை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த மோகன், கொசப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், பாரிமுனையைச் சேர்ந்த செல்வமணி, சூளையைச் சேர்ந்த சதீஷ், ராயப்பேட்டையச் சேர்ந்த கேசவன், நெற்குன்றத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் தருமபுரியைச் சேர்ந்த சரவணன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்