இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் முக்கிய இசை அடையாளமாக பார்க்கப்படுபவர்கள் இசையானி இளையராஜாவும், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும். ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவின் சிஷ்யனாக இருந்தவர். அஞ்சலி படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் இளையராஜா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரின் சிஷ்யனான ஏ.ஆர்.ரஹ்மானுடன் பயணிக்க தொடங்கினார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது சற்றே இளையராஜா வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் இசையின் வெவ்வேறு துருவங்கள், இளையராஜா வெகுஜன மக்களுக்கானவர், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா தாண்டி , உலகம் முழுவதும் ஒலிக்க கூடியவர்.
சமீபத்தில் தனது ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்கள் சிலரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார் அப்போது இசை குறித்தும், இசையமைப்பாளர்கள் குறித்தும் இளையராஜா மனம் விட்டு பேசியிருந்தார். அதில், "ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்து போய்விடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும்.புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும். பழைய பாடல்கள் இப்போதும் புதிதாக மெட்டமைக்கப்பட்ட பாடல் போல இருப்பதால்தான் மனம் அவற்றை கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறது “ என தெரிவித்திருந்தார். மேலும் இசைக்கலைஞர்களின் வீட்டை கூட வெளிநாடுகளில் பராமரிக்கிறார்கள்.இங்கு இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகளை கூட நாம் பாதுகாப்பதில்லை என குறிப்பிட்ட இளையராஜா தனக்கு திரைக்கு முன்னால் தோன்ற விரும்பவில்லை, என் முகத்தை பார்த்து நீங்கள் என்னை நினைவு படுத்திக்கொள்ள கூடாது. இசை மூலம் உங்கள் நினைவில் நான் இருக்க வேண்டும் . என பெருமிதமாக தெரிவித்தார். செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட இந்த செய்தியை இசையைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை ரி ட்வீட் செய்த நடிகர் தனுஷ் “இந்த ட்வீட்டும் இந்த ட்வீட்டில் இருப்பதும், அவ்வளவுதான் “ என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற வீடியோ வைரலானது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா ”ஏன் இப்படி வாசிக்கிற? உனக்கு தான் இந்த ட்யூன் தெரியுமே என்று செல்லமாக அட்வைஸ் வழங்க, சிரித்து நகர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.