A.R. Rahuman: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ஆல்பம் ஹிட் அடித்த வரிசையில் மாமன்னன் திரைப்படமும் இணைந்துள்ளது. 


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வசூல் மட்டுமில்லாது, விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படமாக மாமன்னன் பெயர் பெற்றுள்ளது. இப்படம் ரீலீஸ் ஆவதற்கு முன்னர் இப்படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது. நடிகராக சினிமா வாழ்க்கையில் தனது கடைசிப் படம் என உதயநிதி அறிவித்து இருந்த நிலையில் தனது கடைசி படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கும் ரஹ்மான் ஓ.கே சொல்லிவிட, படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. 


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசையும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக முதலில் வெளியிடப்பட்ட பாடலான ராச கண்ணு பாடல் வடிவேலுவின் குரலில் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் வெளியான மொத்த பாடலில் இரண்டு ஒப்பாரி பாடல் வரிசையிலும், ஒன்று இதமான மெலடி பாடல் வரிசையிலும் இருந்தது. இந்த மெலடி பாடலுக்கு இயக்குநர் செல்வராகவன் இசையமைப்பாளர் ரஹ்மானையும் பாடலாசிரியர் யுகபாரதியையும் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 


அதேபோல், படத்தின் முதல் பாடலான ஓரம் போ பாடல் இந்தக்கால இளசுகளை கவரும் ’பீட்’ ரகத்தில் அமைத்திருப்பார் ரகுமான். இதுமட்டும் இல்லாமல், படத்தின் ஆழத்தினை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவகையில் பின்னணியும் அமைத்திருப்பார். இப்படத்தில் தான் தவிர்க்க முடியாத நபர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் ரஹ்மான் நிரூபித்திருப்பார். 


இந்நிலையில், தற்போது இப்படத்தில் இசையமைக்க ரஹ்மான் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல்கள் சினிமா வட்டாரத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கும் ரகுமான், இப்படத்திற்கு 5 கோடி மட்டும் சம்பளம் பெற்றுக்கொண்டாராம். மேலும், இதற்கு காரணம் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால் அவ்வாறு தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம் ரகுமான். 


ஏற்கனவே படம் வெற்றி பெற்றதும், இயக்குநருக்கு உதயநிதி பரிசாக கார் வழங்கியது, அதிவீரனின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்கு லேப்டாப் வழங்கியது மட்டும் இல்லாமல், அரசியல் தலைவர்களும் பலர் பாராட்டினர். இதுவே இதுவரை மாமன்னன் குறித்தான பேச்சாக இருந்த நிலையில் தற்போது ரஹ்மான் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டது குறித்த தகவலும் செய்தியாகி வருகிறது.