1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள தேசத்தில் சுதந்திர போராட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட இந்திய - பாகிஸ்தான் போரின்போது நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பரபரப்பான கதைக்களத்துடன் உருவான திரைப்படம் தான் 'பிப்பா'. இப்படம் கடந்த 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சிறந்த போர்க்கள படம் :
மிருணாள் தாக்கூர், இஷான் கட்டர், பிரியான்ஷூ, சோனி ரஸ்தான் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிருணாள் தாக்கூர், இஷான் கட்டர் நடிப்பை மக்கள் பாராட்டி தள்ளினர். சிறந்த நடிப்பு, வலுவான திரைக்கதை, அதை படமாக்கி இருக்கும் முறை என சிறந்த ஒரு போர்க்கள படமாக இப்படம் அமைந்து இருந்தது என பாராட்டப்பட்டது. தன்னுடைய வசீகரமான இசையால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று இருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர்.ஆர். பாடலுக்கு எதிர்ப்பு :
இப்படி திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பிப்பா' திரைப்படம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கரார் ஓய் லூஹோ கோபட்' என்ற பாடலை பிரபல வங்கமொழி எழுச்சி கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் 1922 ஆம் ஆண்டு எழுதி இசையமைத்து இருந்தார். இப்பாடலை பிப்பா படத்தில் உபயோகிக்க தகுந்த உரிமைகளை பெற்ற பிறகே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தளத்தையும் ட்யூனையும் மாற்றி அமைத்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
பாடல் நீக்கப்பட வேண்டும் :
காஸி நஸ்ருல் குடும்பத்தினருக்கு பாடலை உருவாக்கிய விதம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்து, பாடலைப் பயன்படுத்தத்தான் அனுமதி அளித்தோம் தவிர அதன் ட்யூனை மாற்றி அமைக்க அல்ல என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அப்பாடலை பொது தளங்களில் இருந்தும் படத்தில் இருந்தும் நீக்கியாக வேண்டும் என செய்தி அனுப்பியுள்ளார் காஸி நஸ்ருலின் பேத்தி அனிந்திதா காஸி .
மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம் :
இந்த விவகாரத்தில் பிப்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராய் கபூர் பி லிம்ஸ், காஸி நஸ்ருல் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். முறையான அனுமதி பெற்ற பிறகே அப்பாடல் பயன்படுத்தப்பட்டது. வங்கதேசத்தின் விடுதலைக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்களின் அவர்களின் அமைதிக்காகவும் நீதிக்காகவும்தான் அப்பாடல் படத்தில் சேர்க்கப்பட்டது. அப்பாடல் யாரை மனதை புண்படுத்தியிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என பதிலளித்து இருந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் அவர்களின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலளித்துள்ளார் காசி நஸ்ருல் பேத்தி அனிந்திதா காஸி.