ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார். அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜானி மாஸ்டருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக ஏஆர் ரஹ்மான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
ஜானி மாஸ்டருடன் ஏ.ஆர் ரஹ்மான் புகைப்படம்
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் சிறை சென்றார். ஜானி மாஸ்டரிடம் பணியாற்றிய துணை நடனக் கலைஞர் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக ஜானி மாஸ்டர் சிறை சென்று ஜாமினில் வெளிவந்தார். சிறைக்கு சென்றபின் ஜானி மாஸ்டர் பட வாய்ப்புகளை பெறுவதில் நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக மீண்டும் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளார் ஜானி மாஸ்டர். தெலுங்கு , இந்தி , தமிழ் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் ஜானி மாஸ்டர். பாலியல் வழக்கில் சிக்கிய ஜானி மாஸ்டரை திரைத்துறையினர் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்படியான நிலையில் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜானி மாஸ்டர்.
ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜானி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இப்பாடலை ஹைதராபாதில் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது. நிகழ்வில் ஏ ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் ஜானி மாஸ்டர் பதிவிட்டு 'உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்
விமர்சனங்களை சந்திக்கும் ரஹ்மான்
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் ரஹ்மான் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளார்கள். தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பொதுவாக பதில் அளிப்பவர் ரஹ்மான். அந்த வகையில் ஜானி மாஸ்டர் சர்ச்சைக்கு ரஹ்மான் விரைவில் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்