30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரை இசையை புயலாக ஆக்கிரமித்து கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தன் 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஆனால் இதே நாளில் தான் ரஹ்மானின் மகன் அமீனும் பிறந்த நாள் கொண்டாடுகிறார் என்பது கூடுதல் தகவல்.
அப்பாவுக்கு க்யூட் வாழ்த்து!
அரிதான மற்றும் மகிழ்ச்சியான விஷயமாக ஆண்டுதோறும் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மகன் ஏ.ஆர்.அமீனுடன் தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு அமீன் தனது 20ஆவது வயதை எட்டியுள்ள நிலையில், முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் தந்தை ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து க்யூட்டான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“எனது அனைத்துமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன், எனது தந்தையாகவும் ஆசிரியராகவும் நீங்கள் கிடைத்ததற்கு. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தன் ஒரு நிமிடப் பாடலுக்கான ப்ரோமோவையும் பகிர்ந்திருந்தார்.
'கற்றார்' டிஜிட்டல் தளம்:
தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ’கற்றார்’ எனும் புதிய டிஜிட்டல் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாகத் அறிவித்துள்ளார்.
”இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இத்தளத்தின் புதிய கலைஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளுக்கான நேரடி வருமானத்தைப் பெறவும் வழிவகுக்கும்” எனவும் முன்னதாக ரஹ்மான் இது குறித்துப் பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளதாகவும், பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வந்து சேரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
”கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்” எனும் திருக்குறளை முன்மாதிரியாகக் கொண்டு, இத்தளத்துக்கு கற்றார் எனும் இந்தப் பெயரை சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.