கற்றார் (KATRAAR) எனும் தமிழ் பெயர் கொண்ட புதிய இசை டிஜிட்டல் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.


இசைப்புயல் பிறந்தநாள்:


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தன் 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 1990கள் தொடங்கி இன்று வரை தன் இசை, தொழில்நுட்பம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த வரிசையில் தன் பிறந்த நாளான இன்று ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 






'கற்றார்' டிஜிட்டல் தளம்:


தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ’கற்றார்’ எனும் புதிய டிஜிட்டல் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாகத் அறிவித்துள்ளார்.


”இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இத்தளத்தின் புதிய கலைஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும்,  கலைஞர்கள் தங்கள் படைப்புகளுக்கான நேரடி வருமானத்தைப் பெறவும் வழிவகுக்கும்” எனவும் முன்னதாக ரஹ்மான் இது குறித்துப் பேசியுள்ளார்.


 






திருக்குறளே முன்னுதாரணம்:


ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளதாகவும், பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வந்து சேரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


”கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்” எனும் திருக்குறளை முன்மாதிரியாகக் கொண்டு, இத்தளத்துக்கு கற்றார் எனும் இந்தப் பெயரை சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.