பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தனது மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என்று கூறினார். அவர் கூறியது, வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


விருது விழாவில் ரஹ்மான்:


திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற மாபெறும் திரைப்பட விருது விழா ஒன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், கமல், சாய் பல்லவி, சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். ரஹ்மானுக்கும் இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. அதை வாங்குவதற்காக ரஹ்மான், மனைவியுடன் மேடையேறி வந்தார்.




“தமிழ்ல பேசுங்க..”


ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறி வந்தவுடன் அந்த விழாவின் தொகுப்பாளர் ரஹ்மானிடமும் அவரது மனைவியிடமும் சில கேள்விகளை கேட்டார். அப்போது பேசிய ரஹ்மான் எனது நேர்காணல்களை நான் திரும்ப பார்க்க மாட்டேன் என்று கூறினார். மேலும், எனது மனைவி நான் கொடுத்த பேட்டிகளை திரும்ப திரும்ப பார்ப்பார் என்றும், என் குரல் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம் என்றும் பேசினார். இதையடுத்து, ரஹ்மானின் மனைவியிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு ரஹ்மானின் மனைவி சாய்ரா பதில் சொல்வதற்குள் ரஹ்மான் அவரிடம், “இந்தியில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க..” என்று கூறினார். 


ரஹ்மானின் மனைவி உடனே “ஓ மை காட்…” என்று சிரிப்புடன் கூற, அந்த அரங்கமே கைதட்டி சிரித்தனர். இதையடுத்து சாய்ரா வணக்கம் தெரிவித்து ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். 


மன்னிப்பு கேட்ட சாய்ரா:


ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம். என்னால் முழுமையாக தமிழில் பேச முடியாது. அதற்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ரஹ்மானின் குரல் என்றால் மிகவும் பிடிக்கும். அவரது குரலால்தான் நான் அவரிடம் காதலில் விழுந்தேன்”  என்று கூறினார்.


வைரலாகும் வீடியோ:


ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியிடம் தமிழில் பேசுமாறு கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கமெண்ட் செய்யும் சில ரஹ்மான் ரசிகர்கள், “தலைவன் வேற பாத்து உசாரு..” எனவும் “சைக்கிள் கேப்ல கேம் ஆட்ற மேன் நீ..” எனவும் காமெடியாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




ரஹ்மானின் தமிழ்ப்பற்று:


பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்தாலும், ரஹ்மான் தமிழ் மொழிக்காக பல்வேறு இடங்களில் குரல் கொடுத்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருது வாங்கினார் ரஹ்மான். அப்போது ஆஸ்கர் விழா மேடையில், “எல்லா புகழும் இறைவனுக்கே..” என்று தமிழில் கூறினார். இதையடுத்து, பல்வேறு நிகழ்வுகளில் தனது தமிழ் பற்றை ஊடகத்தின் முன்னிலையிலேயே காண்பித்தார். ரஹ்மான் முதன்முறையாக இயக்கிய 99 சாங்ஸ் என்ற படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. அந்த பட நிகழ்ச்சியின் தொகுப்பாளர், படத்தின் ஹீரோ எஹான் பட்டிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். அப்போது ரஹ்மான், “அய்யோ இந்தியா…என்ன ஆளை விடுங்க..” என்று காமெடியாக கூறினார். 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வருடம் “இந்தியாவில் உள்ள அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதை விடுத்து இந்தியில் பேச வேண்டும்” என ஒருமுறை பேசினார். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து ‘தமிழணங்கு’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் வார்த்தையை  ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது, அமித்ஷாவிற்கு ரஹ்மான் கொடுத்த பதிலடியாக அப்போது பார்க்கப்பட்டது.