ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் மதராஸி. படத்திற்கான சிறப்பு காட்சிகள் தொடங்கி விமர்சனங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. மதராஸி படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் 

மதராஸி திரைப்பட விமர்சனம் 

மாஃபியா கும்பல் ஒன்று தமிழ்நாட்டிற்குள் பெரியளவில்  ஆயுதங்களை விநியோகம் செய்ய திட்டமிடுகிறது. இந்த கும்பலின் தலைவனாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் வித்யுத் ஜம்வால். பிஜூ மேனன் தலைமையிலான சிறப்பு படை இந்த கும்பலை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம் காதல் தோல்வியில் சோகப்பாடல் பாடிக் கொண்டு எண்ட்ரி கொடுக்கிறார் நாயகன் (ரகு) சிவகார்த்திகேயன். தனது காதலி மாலதி தன்னைவிட்டுச் சென்றதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக காமெடி செய்துகொண்டு சுற்றும் அவரை வைத்து இந்த மாஃபியா கும்பலை தடுத்து நிறுத்த நினைக்கின்றன. அடுத்தடுத்து நகரும் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு குறிப்பிட்ட மன நல பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. ரகுவை வைத்து இந்த மாஃபியா கும்பலை தடுத்து நிறுத்தினார்களா. அவருக்கு இருக்கு மன நல பிரச்சனை என்ன? அவரது காதலி மாலதி ஏன் பிரிந்து சென்றார் என்பதே மதராஸி படத்தின் கதை .

ஒரு எளிய காதல் கதையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார் முருகதாஸ். முதல் பாதி நகைச்சுவை , ரொமான்ஸ் என தொடர சூப்பரான ஒரு இண்டர்வல் ப்ளாக் கொடுத்து ஹைப் ஏற்றுகிறார்கள். இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன.  ஒரு சில காட்சியமைப்புகள்  வழக்கமானவையாகவும் கிரிஞ்சாகவும் இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது. முதல் பாதியில் வெகுளியான ஒரு நடிப்பையும் இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமான ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை என்றாலும்  அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.  சலம்பல பாடலில் சிவகார்த்திகேயனின் நடனம் , வில்லன் வித்யுத் ஜம்வால் காட்சிகள் , ரசிகர்களை கவர்கின்றன.