பாடல் படப்பிடிப்பின்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் இருந்து தப்பிய நிலையில், ஷூட்டிங் தளங்களில் மேம்பட்ட, தரமான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி ஏ.ஆர். ரஹ்மான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தியாவின் பிரபல மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன்.  


தன் குழந்தைப்பருவத்திலேயே தன் அப்பாவின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீன், சென்ற 2015ஆம் ஆண்டு வெளியான ஓகே கண்மணி படத்தின் பாடலான ‘மௌலா வா சல்லிம’ பாடல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.


அதன் பின், தொடர்ந்து தன் தந்தை ரஹ்மானின் இசையில் பாடி வரும் அமீன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் முன்னதாகப் பாடியுள்ளார். மேலும் தனி இசைப்பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில் ஷூட்டிங் தளத்தில் நேரவிருந்த பெரும் விபத்து ஒன்றிலிருந்து தான் நூலிழையில் உயிர் தப்பியதாக நேற்று அமீன் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலானது.


தனது பாடலின் ஷூட்டிங்குக்காக சென்றிருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டும் அலங்கார விளக்குகளும் திடீரென அறுந்து விழுந்து விபத்து நிழ்ந்ததாக அமீன் அச்சத்துடன் பகிர்ந்திருந்தார்.


அமீனுக்கு முன்னதாக அவரது இணைய பக்கத்தில் நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 அதில்"சில நாட்களுக்கு முன்பு எனது மகன் அமீன் மற்றும் அவரது ஸ்டைலிங் குழுவினர் ஒரு அபாயகரமான பேரழிவிலிருந்து தப்பினர். மும்பையில் உள்ள ஃபிலிம் சிட்டியில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நல்வாய்ப்பாக விபத்துக்குப் பிறகு எந்தக் காயமும் ஏற்படவில்லை.


நமது தொழில்துறை வளரும்போது ​​இந்தியாவில் உள்ள ஷூட்டிங் தளங்கள், செட்கள் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விசாரணையின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். 


நேற்று விபத்தில் இருந்து தப்பியது குறித்த பகிர்ந்திருந்த அமீன், ”கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, ​​​​பாதுகாப்பு ஏற்பாடுகளை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். அப்போது நான் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட், சரவிளக்குகள் கீழே விழுந்தன.  சில அங்குலங்கள்... சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை” என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


மேலும் படிக்க: LEO Update: லியோ ஷுட்டிங்கில் 'பிக் டாடி’.. விஷூவல் ட்ரீட் இருக்கு...! விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர்..!


"என் காட்சி குறையும்... ரெஸ்ட் வேணும்... வயசாகிடுச்சு..." வீடியோ பகிர்ந்த பாக்கியலட்சுமி கோபி... கவலையில் ரசிகர்கள்!