`நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிதும் வெற்றியைப் பெறவில்லை. அதன் கதை, திரைக்கதை ஆகியவற்றிற்காக பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டது `வலிமை’ திரைப்படம். எனினும், இயக்குநர் ஹெச்.வினோத், நடிகர் அஜித் குமார் ஆகிய இருவரும் மீண்டும் அடுத்த படத்திற்காக இணைந்துள்ளதுடன் இது தற்போது `ஏகே 61’ என்று அழைக்கப்படுகிறது. `ஏகே 61’ திரைப்படம் வங்கிக் கொள்ளை அடிப்படையில் உருவாகும் த்ரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் உருவாக்கப்பட்டு, இந்தப் படத்தின் சுமார் 80 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் எஞ்சியிருக்கும் காட்சிகள் பூனேவில் திரைப்படமாக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், `ஏகே 61’ திரைப்படம் உண்மைச் சம்பவமாக நடைபெற்ற வங்கிக் கொள்ளை நிகழ்வு ஒன்றைத் தழுவி உருவாகப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிய `சதுரங்க வேட்டை’, `தீரன்: அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து நடித்துள்ளார் நடிகர் அஜித் குமார். இந்த லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து விட்டு, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, `ஏகே 61’ திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. `ஏகே 61’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கெக்கென், மகாநதி சங்கர் முதலானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்ற போதும், இதில் பாடல்கள் எதுவும் இருக்காது எனவும், பின்னணி இசைக் கோர்வைகள் மட்டுமே இரண்டு இருக்கும் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. 







நடிகர் அஜித் குமாரின் முந்தைய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், `ஏகே 61’ மிகப்பெரிய வெற்றி பெறும் அளவில், அவரது கம்பேக் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண