குளிர்காலம் முடிவடைந்து கோடை காலம் நோக்கி அழைத்துச் செல்லும் மார்ச் மாதம் பலராலும் புதிய விடியலாகக் கருதப்படுகிறது. இந்த மார்ச் மாதம் ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய படைப்புகள் வெளியாகின்றன.
ஓடிடி நிறுவனங்கள் இந்த வாரமும், அடுத்த வாரமும் பல்வேறு புதிய படைப்புகளை மக்கள் கண்டுகழிக்க வெளியிடுகின்றன. ஆக்ஷன், த்ரில்லர், காமெடி எனப் பல்வேறு வகையிலான படைப்புகளும் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. விரைவில் வெளியாகவுள்ள ஓடிடி படைப்புகளைக் குறித்து இங்கே காணலாம்...
1. அனாமிகா - MX Player
பாலிவுட் நடிகை சன்னி லியோன், MX Player, ALTBalaji ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் படைப்பு இது. ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில் கட்டுப்பாட்டை மீறிய உளவுத்துறை அதிகாரியாக சன்னி லியோன் நடித்துள்ளார். விக்ரம் பட் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இதில் சோனாலி சீகல், ராகுல் தேவ், சமீர் சோனி, ஷேசாத் ஷேக், அயாஸ் கான் முதலானோர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் கடந்த மார்ச் 10 அன்று வெளியாகியுள்ளது.
2. மாறன் - டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
அரசியலும், ஆக்ஷனும் கலந்த த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புலனாய்வுப் பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அண்ணன் தங்கை உறவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த மார்ச் 11 அன்று வெளியானது.
3. ப்ளட் பிரதஸ் - Zee 5
ஜெய்தீப் அஹ்லாவத், ஜீஷான் அய்யுப் சகோதரர்களாக நடித்துள்ள இந்த க்ரைம் தொடரை ஷாத் அலி இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் தொடரான `கில்ட்’ என்பதில் இருந்து தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. டீனா தேசாய், ஷ்ருதி சேத், மாயா அலக், முக்தா வெய்ரா கோட்சே, சதிஷ் கௌஷிக், ஜிதேந்திரா ஜோஷி முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் மார்ச் 18 அன்று வெளியாகிறது.
4. ஜல்சா - அமேசான் ப்ரைம் வீடியோ
ஒரு வெற்றிகரமான செய்தியாளருக்கும், அவரது சமையல்காரருக்கும் இடையிலான முரண்பாடு குறித்த படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது `ஜல்சா’. சுரேஷ் த்ரிவேணி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன், ஷெஃபாலி ஷா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் மானவ் கவுல், ரோகிணி ஹத்தங்காடி, இக்பால் கான், விதாத்ரி பண்டி, ஸ்ரீகாந்த் மோகன் யாதவ், ஷஃபீன் படேல், சூர்யா காசிபாட்டியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
5. இட்டெர்னலி கன்ஃப்யூஸ்ட் அண்ட் ஈகர் ஃபார் லவ் - நெட்ஃப்ளிக்ஸ்
ஜோயா அக்தர், ஃபர்ஹான் அக்தர் இணைந்து தயாரித்துள்ள இந்தத் தொடரில் 24 வயது இளைஞன் ஒருவனின் காதல், உறவுகள் முதலானவற்றைப் பற்றிய கதை பேசப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராகுல் நாயர் இயக்கியுள்ள இந்தத் தொடரில் விஹான் சமத், ராகுல் போஸ், சுசித்ரா பிள்ளை, ஜிம் சார்ப், அங்குர் ரதீ ஆகியோர் நடித்துள்ளனர்.