கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த  கமலின்  தீவிர ரசிகை ஒருவர்   கமல்ஹாசனின் முகத்தை வரைந்து வஜ்ரா உலக சாதனையை படைத்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் வசிக்கும்  நேஹா ஃபாத்திமா என்ற  இளம்பெண் , கமலின்  முகத்தை கோடுகள் மற்றும் புள்ளிகள் இல்லாமல் , முழுக்க முழுக்க கமலில் பெயரை மட்டுமே எழுதி   ”ஸ்டென்சில்” வகை ஓவியத்தை வரைந்துள்ளார். பென்சில் மூலம் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் செலவிட்டு ”kamal haasan" என்ற எழுத்தின் மூலம் கமலின் முகத்தை வரைந்துள்ளார்.   இவ்வகை  ஸ்டென்சில் படத்திற்காக நேஹாவிற்கு வஜ்ரா  உலக சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.



இது குறித்து அறிந்த  நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில் “கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா  புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!” என குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவை கண்ட அவரது தீவிர ரசிகையும், சாதனை ஓவியருமான நேஹா ஃபாத்திமா “ ரொம்ப நன்றி சார் “ என உற்சாகமாக பதிலளித்துள்ளார்.  


 






 இது குறித்து குரல் அஞ்சல் ஒன்றையும் பதிவு செய்துள்ள கமல்ஹாசன்,   “ துல்லியமாக எனது படத்தை வரைந்துள்ளீர்கள் நேஹா ஃபாத்திமா, அதற்கு மிக்க நன்றி!  நீங்கள் சிறந்த ஓவிய திறமையை பெற்றிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. மேலும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உங்களுக்கு அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.


நேஹா ஃபாத்திமாவிற்கு வஜ்ரா உலக சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழில் “  இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் நேஹா ஃபாத்திமா என்பவர், பிரபல நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ஸ்டென்சில் புகைப்படத்தை வரைந்து வஜ்ரா உலக சாதனையை படைத்துள்ளார்.2.5 மணி நேரம் செலவிட்டு அவரின் பெயரிலையே  இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பதால் வஜ்ரா உலக சாதனையில் இடம்பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ”என குறிப்பிடப்பட்டுள்ளது.


மிகப்பெரிய  கமலின் தீவிர ரசிகையான நேஹா ஃபாத்திமா இது தவிற கமலின் பிறந்த நாள் அன்று அவர் நடித்த படங்களில் 49  கெட்டப்புகளை இலையில் ஓவியமாக  செதுக்கி அதனை ஃபிரேம் செய்து பகிர்ந்துள்ளார்.  நேஹா  ஓவியராக இருந்தாலும் தன்னை  சார்டட் அக்கவுண்டன்டாகவும் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.  வஜ்ரா உலக சாதனை விருது தவிற ,  இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட், அமெரிக்கா புக் ஆஃப் ரெக்கார்ட், இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் போன்ற பல்வேறு விருதுகளை  தான் வரைந்த ஓவியத்திற்காக  நேஹா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.