சென்னை, கே.கே நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர், தந்தை பெரியார் தெருவை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜோதிஸ்ரீக்கும் (19), ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பாலமுருகன் (29) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாலமுருகனும் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து, "வீட்டிற்காக கடன் வாங்கி உள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி கொடு" என கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தி உள்ளனர்.


இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ தனது கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் அடைக்கலம் ஆனார். இந்நிலையில், ஏப்ரல் மாதம் 4்-ஆம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயிலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, முதல் மாடி அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்தார். இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஜோதிஸ்ரீயின் தற்கொலை குறித்து ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும், அவர் கைப்பட எழுதிய உருக்கமாக ஒரு கடிதம் ஒன்றும் விசாரணையில் சிக்கியது. அதில், எனது சாவுக்கு கணவர் பாலமுருகனும், மாமியார் அம்சா மற்றும் குடும்பத்தினர் தான் காரணம் என கூறியிருந்தார். அதேபோல்  தமது தற்கொலைக்கு காரணமான தனது கனவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என தமது குடும்பத்தினருக்கு உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில்  ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் பாலமுருகன், மாமியார் அம்சா மற்றும் பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ் ஆகியோர்தான் என்பது காரணம் திருவள்ளூர் ஆர்.டி.ஓ  விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரின் உத்தரவுவின் பேரில் திருமுல்லைவாயில் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 



திருமணமான நான்கே மாதத்தில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் பி.காம் பட்டதாரியான ஜோதிஸ்ரீ உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் கேரளா மாநிலம் கொல்லத்தில் கரண்குமார் என்பவருக்கு 100 சவரன் நகை, 1.2 ஏக்கர் நிலம், 20 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட காரின் மதிப்பு குறைவு என்பதால் அவரது மனைவி விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியாதால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவர் கேரளாவில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதே போன்ற சம்பவம் சென்னையிலும் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.