நடிகை கெளதமி புகார் அளித்துள்ள நிலையில் பா.ஜ.க. பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை கெளதமி அளித்த புகாரை அடுத்து 5 பிரிவுகளின் கீழ் 6 பேர் வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரணையை தொடங்கியுள்ளனர். அழகப்பன் அவரது மனைவி நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அழகப்பன் உட்பட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கெளதமி பா.ஜ.க.-வில் இருந்து விலகல்
கடந்த ஒரு மாதம் முன்பு, சென்னை காவல் ஆணையரிடம் கெளதமி அழகப்பன் மீது புகார் அளித்திருந்தார். அதில், “ நான் 17 வயது முதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி. எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் தொடர்பு கொண்டு எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.
நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதே வேளையில் எனது கையெழுத்தை மோசடியாகப் போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர்.” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அழகப்பன் மீது கெளதமி புகார் அளித்தும் அந்த விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் ராஜ பாளையம் தொகுதியில் ப்ல்வேறு களப்பணியாற்றியும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டது, மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பது, கட்சியில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது ஆகியவற்றை குறிப்பிட்டு அதிருப்தியுடனும் மிகுந்த வேதனையுடனும் கட்சியில் இருந்து விலகுவதாக கெளதமி அறிவித்துள்ளார்.