மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் 93 வயதான சாருஹாசன், டான் ஆக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 


1990 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனாக அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். ரஜினி, கமல் நடிப்பில் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு நிகராக புகழோடு இருந்தவர் தான் மோகன். இவருடைய சாதுவான முகபாவனை பெண்களை அதிகளவு ஈர்த்தது. அதிக செலவு இல்லாமல் மோகனை வைத்து பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிப்பெற்று வசூலை வாரி குவித்ததால் தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக மோகன் வலம் வந்தார்.


சினிமாவின் உச்சத்தில் இருந்த மோகன் திடீரென திரையுலகை விட்டு ஒதுங்கினார். அவர் படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு உடல் நல பாதிப்பு, காதல் விவகாரம் என பல காரணங்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக மோகன் டீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கும் ‘ஹரா’ பாத்தில் மோகன் நடித்து வருகிறார். எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா தயாரிக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 




ஹரா படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் நிலையில், மிகப்பெரிய பழம்பெரு நடிகரும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். தாதா 87 படத்தில் நடித்த சாருஹாசன் ஹரா படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 93 வயதான சாருஹாசன், மோகனுடன் இணைந்து நடிப்பதாகவும், ஹரா படத்தில் டான் கதாபாத்திரத்தில் சாருஹாசன் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. 


சமூகத்துக்கு நல்லது செய்யும் டானா சாருஹாசன் நடிப்பதாகவும், எந்த காட்சிகளை கொடுத்தாலும் வயதை காரணம் காட்டி சோர்வடையாமல் சாருஹாசன் உற்சாகமாக நடித்துள்ளதாகவும், இதற்கான அவரது குடும்பத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார். இதேபோன்று, வில்லன் கேரக்டரில் சுரேஷ் மேனனும், அதிரடி அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் வனிதா விஜய்குமாரும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரா படம் விரைவில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.


பள்ளியில் படிக்கும் போதே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல், ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே 'ஹரா' படத்தின் முக்கிய நோக்கம் என அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே வெளியான ஹரா படத்தின் டைட்டில், டீசர் மற்றும் 'கயா முயா...' பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர்களின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது.


நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மோகனின் மீண்டும் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயன்றுள்ளனர். அவர்களை நிராகரித்த மோகன், விஜய் ஸ்ரீ ஜியின் கதையை கேட்டு பிடித்து விட்டதால் ஹரா படத்தில் நடிக்க முன் வந்துள்ளார்.