90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, மலையாளம், கன்னடம், பெங்காலி, பஞ்சாபி மற்றும் மராத்தி என பல மொழி  திரைப்படங்களில் மிகவும் பிரபலமான ஒரு முன்னணி நடிகையாக கொடிகட்டி பிறந்தார் நடிகை நக்மா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை நக்மாவின் 49வது பிறந்தநாள் இன்று. 



ஃபேவரைட் நடிகை :


90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக கனவு கன்னியாக வலம் வந்த நக்மாவை அவ்வளவு எளிதில் மறந்த விட முடியாது. இந்திய சினிமாவுக்கு அவரின் பங்களிப்பு என்பது எண்ணில் அடங்காதது. அவரின் நடிப்பில் வெளியான பாட்ஷா, காதலன், பிஸ்தா, மேட்டுக்குடி, வில்லாதி வில்லன், ஜானகிராமன், லவ் பேர்ட்ஸ்  உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்கள் அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது. மெகா ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார், பிரபு தேவா, கார்த்திக், சத்யராஜ்,  சரத்குமார் என பல ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். 


தமிழில் அறிமுகம் :


இந்தி திரையுலகில் ஒரு இளவரசியாக வலம் வந்த நடிகை நக்மாவை 'காதலன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எத்தனை ஹீரோயின்களுக்கு அமையும். அப்படி வெளியான 'பாட்ஷா' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் மூலம் நக்மாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடம் கிடைத்தது. 


 



அரசியல் பிரவேசம் :


முன்னணி நடிகையாக இருந்த நக்மா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் மற்றும் தீனா திரைப்படங்களில் தலைகாட்டிவிட்டு சென்றார். அதை தொடர்ந்து முழுமையாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய நக்மா அரசியலில் குதித்தார். 


திருமணம் மீது வந்த ஆசை :


அரசியல் பாதையில் மிகவும் உறுதியுடன் பயணித்து வரும் நடிகை நக்மாவின் தங்கை ஜோதிகாவும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவராக தமிழ்நாட்டின் மருமகளாக இருந்து வருகிறார். அதே போல அவரின் மற்றுமொரு தங்கையான ரோஷிணியும் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டனர். ஆனால் நக்மா மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகளுடன் வாழ விருப்பப்பட்டால் அது நடக்குமா என தெரியவில்லை. திருமணம் நடந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார் நக்மா. 


நடிகை நக்மா திரைத்துறையில் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார், இந்தி நடிகர் மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பலருடனும் இணைத்து கிசுகிசுக்கபட்டார். ஆனால் அவர்கள் யாருடனும் காதல் இருந்ததாக நக்மா தெரிவிக்கவில்லை.