இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற பெயருக்கு அடையாளமான இயக்குநர்களாக இன்றைய தலைமுறையினருக்கு பரிச்சயமானவர்கள் ஷங்கர், எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்கள். ஆனால் இந்த ட்ரெண்ட் 40களில் வெளியான சந்திரலேகா முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவந்த மண், நாடோடி மன்னன் என பல படங்கள் மெகா பட்ஜெட்டில் உருவாகி நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.
பிரம்மாண்டங்களின் முன்னோடி:
அந்த சமயத்தில் அது போன்ற சில மெகா பட்ஜெட் படங்கள் தோல்வியையும் சந்தித்தது. பிரம்மாண்டம் என்ற ட்ரெண்ட் குறைய தொடங்கிய காலகட்டத்தில் மீண்டும் அதை 90'ஸ் காலகட்டத்தில் உயிர்ப்பித்த பெருமை ஆபாவாணனை தான் சேரும். எனவே இவர் ஷங்கர், ராஜமௌலிக்கு எல்லாம் முன்னோடி என்றால் அது மிகையல்ல.
1986ம் ஆண்டு வெளியான 'ஊமை விழிகள்' திரைப்படம் மூலம் அறிமுகமான ஆபாவாணன் தனது தரமான திரைக்கதையால் புதுமையை படைத்தார். ஊமை விழிகள், செந்தூரப்பூவே, காவியத்தலைவன், கருப்பு ரோஜா, இணைந்த கைகள் என ஐந்து வெற்றி படங்களுக்கு அச்சாணியாக இருந்தவர். இப்படத்தினை தயாரித்ததோடு அதன் திரைக்கதையை எழுதி படத்தின் இயக்கத்திலும் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியவர். மிரள வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்:
90'ஸ் காலகட்டத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒரு தனி இடத்தை பிடித்தவர். இது வரையில் தமிழ் சினிமா வரலாற்றில் காணாத படங்கள் என சொல்லும் அளவுக்கு ஆபாவாணன் திரைக்கதை இருக்கும் என்பது தான் அவரை இன்றும் நினைவு கூற வைக்கிறது. அனல் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் :
ஆபாவாணன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் மிக முக்கியமானவை. தனித்துமான அந்த காட்சிகள் பார்வையாளர்களை மிரள செய்யும். டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டத்தை முதன் முதலில் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அவரின் படங்களில் அமையும் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் செந்தூர பூவே படத்தின் ட்ரெயின் ஃபைட் காட்சிகள். ஆர்.ஆர்.ஆரில் ஆபாவாணன் டச் :
ஆபாவாணன் திரைக்கதை எழுதி தயாரித்த 'இணைந்த கைகள்' திரைப்படத்தின் கதைக்களம் ஒரு ஆதாரப்புள்ளியை சார்ந்தே நகர்த்தப்படும். ஆபாவாணன் ஸ்டைலை பின்பற்றிய அதே போன்ற ஒரு கதைக்களம் தான் சமீபத்தில் வெளியாகி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று பாராட்டுகளை பெற்று கொடுத்த ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் கதைக்களத்தின் மையக்கதையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மியூசிக் சென்ஸ்: ஆபாவாணன் தனது முதல் படமான 'ஊமை விழிகள்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய மனோஜ் – கியான் இரட்டையரே, தொடர்ந்து அவரின் ஐந்து படங்களிலும் இசையமைத்தார்கள். ஆபாவாணன் படங்களில் பாடல்களுக்கும், இசைக்கும், பிண்ணனி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தயாரிப்பு, திரைக்கதை வசனம் அவற்றை கடந்து இணை இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது அவரின் இசை ஞானத்தை காட்டுகிறது. அவரின் படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் எவர்கிரீன் பாடல்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரைத்துறையில் இன்று சாதனைகளாக கொண்டாடப்படும் பல விஷயங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து அன்றே அதை சாதித்து வெற்றி கண்டவர் ஆபாவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.