தமிழ் சினிமா இதுவரையில் காணாத ஒரு வித்தியாசமான இயக்குனர் செல்வராகவன். தனது முதல் படத்திலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். அவரின் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசம் காட்டுவது தான் அவரின் ஸ்பெஷலிட்டி.  


9ம் ஆண்டில் இரண்டாம் உலகம் : 


'துள்ளுவதோ இளமை' படத்தில் தொடங்கிய அவரின் பயணம் தொடர்ச்சியாக பல வெற்றிகளை அடுக்கின. இருப்பினும் சில படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அப்படி ஒரு திரைப்படம் தான் 2013ம் ஆண்டு இதே நாளில் வெளியான 'இரண்டாம் உலகம்' திரைப்படம். நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்து விட்டது.  பல கோடி ரூபாய் செலவில் இயக்குனர் செல்வராகவனின் கற்பனை உலகிற்கு வண்ணமயம் கொடுக்க முயற்சி செய்த இப்படம் தோல்வியை சந்தித்தது. 


 



 


நான் மட்டும் பொறுப்பேற்க முடியாது :


செல்வராகவன் திரைப்படம் என்றால் அப்படி இருக்கும் என மிகவும் ஆர்வமாக வந்த ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளிய இப்படத்தின் தோல்வி குறித்து செல்வராகவன் ஒரு நேர்காணலில் பதில் அளித்துள்ளார். " இரண்டாம் உலகம் தோல்வி அடைந்ததில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் ஒன்றை நினைத்து எனக்கு வருத்தம் உண்டு. ஒரு படம் வெற்றி பெறாவிட்டால் அதற்கான முழு காரணத்தையும் இயக்குனர் மீது செலுத்துவது என்பது எப்படி நியாயமாகும்.


ஒரு பேருந்தை ஒரே ஆளாக எப்படி நகர்த்த முடியும். அதற்கு தேவையான அம்சங்கள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதே போல ஒரு திரைப்படம் வெளியானதும் அது எதிர்பார்த்த அளவு இல்லை என்றவுடன் படம் சொதப்பல் ஆனதற்கு என்ன காரணம் யாரெல்லாம் காரணம் என்பதை பற்றி எல்லாம் ஆராயாமல் அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒட்டுமொத்தமாக பழியை தூக்கி இயக்குனர் தலையில் போடுவது எப்படி சரியானதாக இருக்க முடியும். ஒரு இயக்குனரால் மட்டுமே அனைத்திற்கும் எப்படி பொறுப்பேற்க முடியும்" என்றார். 


 




கலந்து பேச யாரும் முன்வரவில்லை :


மேலும் இயக்குனர் செல்வராகவன் கூறுகையில் " ஹாலிவுட் படங்களை எடுத்துக் கொண்டால் இந்திய இயக்குனர்கள் செய்வதில் 10 சதவிகிதம் மட்டுமே அவர்கள் செய்வார்கள். அவரவர்களின் பொறுப்புகளை அவர்களே செய்வார்கள். இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு நாங்கள் தான் காரணம் அதை நான் ஏற்று கொள்கிறேன் ஆனால் நான் மட்டுமே காரணம் கிடையாது. சொதப்பியவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை" என்றார் இயக்குனர் செல்வராகவன்.