விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான 'நானும் ரௌடி தான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விக்னேஷ் சிவன் இரண்டாவது படம் :
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'நானும் ரௌடி தான்'. அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த ஒரு திரைப்படம். போலீஸ் ஆக வேண்டும் தனது இலட்சியத்தையே மாற்றிக்கொண்டு போலீசை விட ரௌடி தான் கெத்து என நினைத்து அடாவடித்தனமாக அவர் செய்த ரவுசுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அவரின் ஜோடியாக காது கேளாத பெண்ணாக நயன்தாரா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல்களை அள்ளினார். கூடவே சேர்ந்து அவரின் டப்பிங் வேறு லெவலில் ரசிகர்களின் கவனம் பெற்றது.
டுபாக்கூர் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி நயன்தாராவை பார்த்த நிமித்திலேயே காதலில் விழுந்து விடுகிறார். அவர்களின் எதார்த்தமான நடிப்பு படம் முழுக்க பயணித்தது. ஆர் யூ ஓகே பேபி... என அவர் சொல்லும் வசனம் இன்று வரை ட்ரெண்டிங் தான். அனிருத் இசை படத்தின் வெற்றியை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.
சிம்பிள் திரைக்கதை :
சலசலப்பு இல்லாத சிம்பிள் கதை, காமெடி கலந்த காதல், வெறித்தனம் இல்லாத கலகலப்பான நகைச்சவையான வில்லன்கள், ஆர்.ஜே. பாலாஜியின் அளவான காமெடி, அசத்தலான பாடல்கள் என படத்தை இன்று வரை கொண்டாட செய்து வருகிறது. ''தங்கமே'' முதல் ''கண்ணான கண்ணே'' வரை இன்றும் அனைவரின் பிளே லிஸ்டிலும் நிச்சயம் இப்படத்தின் பாடல்கள் இன்று வரை கேட்ட ரசிக்கப்பட்டு வருகின்றன.
"நானும் ரௌடி தான்" படத்தின் படப்பிடிப்பில் தான் விக்கிக்கும் நயனுக்கும் காதல் பத்திக்கிச்சு என்பது இப்படத்தின் மற்றுமொரு ஸ்பெஷல்.
பிளாஷ் பேக் போட்டோ:
8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள "நானும் ரௌடி தான்" படத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிளாஷ் பேக் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்று நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற தென்னிந்திய திரையுலகம் மற்றும் பாலிவுட் திரையுலகிலும் ஒரு கலக்கலான ஸ்டார் நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். உலகெங்கிலும் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.