காதலும் காமெடியும் கலந்த ஒரு கலக்கலான காமெடி திரைப்படம் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரௌடிதான்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டிகளை நிறைவு செய்தாலும் அது கொடுத்த அந்த ஸ்மூத் பீல் இன்றும் பசுமையாகவே இருக்கிறது.
படத்தின் சுருக்கம் :
லோக்கல் ஏரியா இன்ஸ்பெக்டர் மகன் என்ற செல்வாக்கோடு மிகவும் கெத்தாக ஏரியாவை சுற்றி வரும் வாலிபனாக விஜய் சேதுபதி. காது கேளாத அழகான ஹீரோயினாக நயன்தாரா. முதல் முறை பார்த்ததும் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் பற்றிக்கொள்கிறது. ஹீரோயினுக்கு இருக்கும் பிரச்சனையை என்ன? அவளின் இலட்சியத்தை ஹீரோ நிறைவேற்றுகிறாரா? காதல் கனிந்ததா? இதுதான் நானும் தான் படத்தின் திரைக்கதை.
மகனை எப்படியாவது போலீசாக்கி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் அம்மா ராதிகா இருக்க மகனோ போலீசை விட தான் கெத்து என தன்னை ஒரு தமாசு ரௌடியாகவே வெளிப்படுத்துகிறார். அதற்காக அவர் செய்யும் பில்டப்புகள் எல்லாம் தனி ரகம்.
நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து கேட்டறிந்து அவளின் ஒரே லட்சியமாக ரௌடி பார்த்திபனை கொலை செய்ய வேண்டும் என்ற கொள்கைகை தனது ஒரே நோக்கமாக எடுத்து கொண்டு முடிந்த வரையில் போராடுகிறார். நான் ரௌடிதான் என தன்னைத்தானே நயன்தாராவிடம் அவர் நிரூபிக்கும் ஒவ்வொரு இடத்திலும் கைதட்டல்களை குவித்தார்.
நயன்தாரா திரைப்பயணத்தை அலங்கரித்த படங்களில் 'நானும் ரௌடி தான்' படமும் நிச்சயம் இடம்பெறும். காது கேளாத பெண்ணாக நடிப்பில் ஒரு பக்கம் அசத்திய நயன்தாராவின் டப்பிங் வேறலெவலில் இருந்தது. காதம்பரி - பாண்டியாக இருவரும் சேர்ந்து கதையை வெற்றி பாதையில் நகர்த்தி சென்றனர். அவர்களுக்கு மேலும் பக்கபலத்தை தனது இசையால் கொடுத்து இருந்தார் அனிருத். ஆர்.ஜே. பாலாஜியின் டைமிங் காமெடியும் ரசிக்கும் படி இருந்தது.
பார்த்திபன் உண்மையிலேயே வில்லனா அல்லது சிரிப்பு பாத்திரமா என ஒரு நொடி யோசிக்க வைத்தார் என்றாலும் கிள்ளிவளவனாக மனதில் பதிந்துவிட்டார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பிள்ளையை கொத்தமல்லி கொழுந்து என அவர் கொஞ்சும் இடங்களில் எல்லாம் பாசத்தை பொழிந்துவிட்டார் ராதிகா.
ஆக்ஷன் காட்சிகள், த்ரில்லிங் அம்சங்கள் என எதுவுமே இல்லாவிட்டாலும் மிகவும் யதார்த்தமான ஒரு கதைக்களத்தை காமெடி கலந்த காதல் படமாக கொடுத்து அப்பாலஸ் அள்ளினார் விக்னேஷ் சிவன். மொத்தத்தில் இப்படம் நிச்சயம் நிலைத்து நிற்கும் ஒரு எவர்க்ரீன்தான்