இயக்குநர் மணிரத்னம் - நடிகர் கார்த்தி காம்போவில் வெளியான “காற்று வெளியிடை” படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


உதவி இயக்குநர் - ஹீரோ 


தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் நடிகர் கார்த்தி. அதன்பின் பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி எங்கோ சென்று விட்டார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள கார்த்தி தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படம் தான் “காற்று வெளியிடை”.


இந்த படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அதிதி ராவ் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் லலிதா, ஆர்.ஜே.பாலாஜி,ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


அதே காட்சி.. அதே மணிரத்னம் 


ராணுவ வீரராக இருக்கும் கார்த்திக்கும், ஸ்ரீநகர் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல், ஊடல், பிரச்சினை, பிரிவு, மீண்டும் ஒன்று சேர்தல் என வழக்கமான மணிரத்னத்தின் திரைக்கதைக்குள் தேச பக்தி, பாகிஸ்தான் ராணுவம் என கலந்துகட்டி ஒரு கதையை கொடுத்திருந்தார். தாடி, மீசை என எதுவுமில்லாமல் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட கார்த்தியை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு நேரம் கோபம், மறுநேரம் அதீத காதல் என கார்த்தி காட்டிய வெரைட்டி, இந்த இரண்டுக்கும் நடுவில் வாழ்க்கையை வாழ நினைக்கும் காதலி அதிதி என கேரக்டர்களாகவே வாழ்த்திருந்தார்கள். 






சொல்லப்போனால் காற்று வெளியிடை மிகவும் சிறந்த கதையை கொண்ட படமாகும். ஆனால் அதில் தேவையில்லாத காட்சிகளை எல்லாம் சேர்த்து ரசிகர்களை அதிருப்தியடைய செய்து விட்டார்கள். படத்தில் ஒரு இடத்தில் அதிதி கார்த்தி இடையேயான உறவை குறிப்பிட்டு வசனம் ஒன்று வரும். “நீ என்னை மகாராணி மாதிரியும் நடத்துற.. அதேசமயம் செல்ல நாய்க்குட்டி மாதிரியும் நடத்துற.. நான் நானாகவே இருக்கணும்” என சொல்லுமிடம்... காதலிப்பவர்கள், திருமணம் செய்து வாழும் பெண்களின் மனநிலையை தெள்ளத்தெளிவாக காட்டும் இடமாகும். 


ரசிகர்களை கவர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் - ரவிவர்மன் 


மணிரத்னம் படம் என்றாலே நான் கொஞ்சம் வேற மாதிரி என சொல்லும் அளவுக்கு மீண்டும் இசையில் மாஸ் காட்டியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல் காஷ்மீரின் பனிப்படலம் தொடங்கி பெப்பியான கலர்ஃபுல் பாடல்கள் வரை என கேமராவில் மாயவித்தை காட்டியிருந்தார் ரவிவர்மன். ஆனால் ரசிகர்களை கட்டிப்போட வைக்கும் மணிரத்னத்தின் மேஜிக் இந்த காற்று வெளியிடை படத்தில் மிஸ்ஸாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.